கிராமங்களில் கள ஆய்வுப்பணி நடத்தி ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்


கிராமங்களில் கள ஆய்வுப்பணி நடத்தி ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 April 2018 5:00 AM IST (Updated: 21 April 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

கிராமங்களில் கள ஆய்வுப்பணி நடத்தி ஏழை மக்களுக்கு அதிகாரிகள் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் 2018-ம் ஆண்டிற்கான குடிமைப்பணி தின விழா கம்பன் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி கவர்னர் கிரண்பெடிபேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மற்ற மாநிலங்களை விட புதுச்சேரியில் வளஆதாரங்கள் அதிகமாக உள்ளன. காவல்துறையில் போலீசாரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. பிற மாநிலங்களில் இல்லாத திட்டங்களை இங்கு செயல்படுத்தி வருகிறோம். தலைமை செயலாளர் கூறும் வரை அதிகாரிகள் காத்திருக்க வேண்டியதில்லை. அதிகாரிகள் களஆய்வுக்கு செல்ல வேண்டியது அவசியம். அப்போது தான் என்ன நடக்கிறது, மக்களுக்கான தேவைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும். இல்லையெனில் திட்டங்கள் அனைத்தும் கோப்பாகவே அலுவலகத்தில் இருக்கும். மக்களுக்கு தேவையான வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுக்கவேண்டும்.

அதிகாரிகள் கிராமப்பகுதிகளுக்கும் சென்று களஆய்வு மேற்கொண்டு கடைநிலையில் உள்ள ஏழை, எளிய மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான கல்வி, மருத்துவம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கிடைக்க முன்னுரிமை அளிக்கவேண்டும். அரசு பணத்தை தங்களுடைய பணம் போன்று கவனமாக செலவு செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார்கள். பின்னர் அவர்கள் மாற்றப்படுவார்கள். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு இல்லை. எனவே நேர்மையாக தைரியத்துடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுச்சேரி முன்னேற்றத்திற்கு அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், சுற்றுலா ஆகியவற்றில் சிறிய மாநிலங்களில் முதலிடத்தில் புதுவை உள்ளது. இதற்கு காரணம் அதிகாரிகள்தான். இதற்காக பெருமைப்படுகிறேன். அரசியல்வாதிகள் தற்காலிகமானவர்கள், அதிகாரிகள் நிரந்தரமானவர்கள்.

அதிகாரிகள் ஒவ்வொருவரும் பணியில் தங்களது தனித்தன்மையை நிரூபிக்க வேண்டும். உங்களுக்கான சம்பளம் மக்களின் வரிப்பணத்தில் இருந்து தரப்படுகிறது. புதுவையில் ஏராளமான அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. சிலருக்கு பதிவு உயர்வுகள் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. பணி நியமன விதிப்படி காலிப்பணியிடங்களை நிரப்பவும், பதவி உயர்வு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு முழுமையான நிதியுதவி அளித்து வருகின்றது. ஆனால் அதற்கான கோப்புகளை புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு செயலர்கள் மற்றும் அதிகாரிகள் தயாரித்து டெல்லிக்குச் சென்று திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்று நிதியை பெறுவது இல்லை. இந்தநிலை மாறவேண்டும். மத்திய அரசு என்னென்ன திட்டங்களுக்கு ஊக்குவிப்பு நிதிகளை தருகின்றது என்பதை அரசு அதிகாரிகள் அறிந்து, அதற்கான கோப்புகளை தயாரித்து டெல்லி சென்று நிதியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நிதியை பெற்று வந்தால் புதுவை மேலும் வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story