கடற்கரையோரம் மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: போலீசாருக்கு, கலெக்டர் உத்தரவு


கடற்கரையோரம் மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: போலீசாருக்கு, கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 21 April 2018 4:00 AM IST (Updated: 21 April 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் கடற்கரையோரம் மது குடிப்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு கலெக்டர் கேசவன் உத்தரவிட்டார்.

காரைக்கால்,

காரைக்கால் கலெக்டர் கேசவன் தலைமையில் கடற்கரையில், புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் இயங்கிவரும், சீகல்ஸ் உணவக ஊழியர்கள், நேற்று முன்தினம் இரவு கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு கடற்கரையை தூய்மைப்படுத்தினர்.

பின்னர் கலெக்டர் கேசவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காரைக்கால் கடற்கரை பகுதியானது பலதரப்பு மக்கள் வந்துபோகும் பொது இடம். அதனால்தான் பொதுமக்கள் நலன் கருதி, கடற்கரையில் உள்ள வியாபாரிகளை தங்கள் கடை முன்பு அவசியம் குப்பைத்தொட்டி வைத்திருக்கவேண்டும். மேலும், கடற்கரையில் பல பகுதிகளில் தேவையான குப்பைத்தொட்டிகள் அமைத்துள்ளோம். அதனால், கடற்கரைக்கு வருவோர் குப்பைகளை குப்பைத்தொட்டியில் மட்டுமே போடவேண்டும். அப்போதுதான் கடற்கரை தூய்மையாக இருக்கும். கடற்கரையை தூய்மையாக பராமரிக்க முன்வர வேண்டும்.

காரைக்கால் நகரையும், கடற்கரையையும் சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு மக்களிடம்தான் உள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகமாகக் கூடும் கோவில்கள், பஸ்நிலையம், ரெயில் நிலையம், கடற்கரை, கடைவீதி போன்ற இடங்களில் குப்பைகளை வெளியே வீசியெறிவதை மக்கள் தவிர்க்கவேண்டும். மாறாக குப்பைகளை குப்பத்தொட்டியில் மட்டுமே போடவேண்டும்.

அதேபோல், கடற்கரையோரத்தில் சிலர் மது குடித்துவிட்டு கண்ணாடி பாட்டில்களை உடைத்து எறிகிறார்கள். இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இது தவிர்க்கப்படவேண்டும். இதனை போலீசார் ரோந்துப் பணியின்போது கண்காணித்து கடற்கரையோரம் மதுகுடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கேசவன் கூறினார்.

Next Story