எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 21 April 2018 4:45 AM IST (Updated: 21 April 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்ததால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர், 

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் சமூக அறிவியல் பாடத்தாளுடன் பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. கரூர் மாவட்டத்தில் 192 பள்ளிகளை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகளுக்கு 53 மையங்களில் பொதுத்தேர்வு நடந்தது. இதில் 12 ஆயிரத்து 290 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த நிலையில் தேர்வு முடிந்ததும் பகல் 12.45 மணி அளவில் தேர்வு அறையில் இருந்து மாணவ- மாணவிகள் வேகமாக வெளியே ஓடி வந்தனர். தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் ஒருவர் மீது ஒருவர் பேனா மையை தெளித்தனர். மேலும் வண்ண நிறப்பொடிகளை ஒருவர் முகத்தில் ஒருவர் தடவி உற்சாகமடைந்தனர்.

மாணவர்கள் சிலர் வினாத்தாள்களை தூக்கி எறிந்து துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவிகள் மையை தெளித்தும், ‘ஸ்பிரே’ அடித்தும் தேர்வு முடிந்ததை கொண்டாடினர். மேலும் மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். சிலர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பிரியா விடை பெற்றனர். ஆசிரியர்களும் மாணவ- மாணவிகளை வாழ்த்தி அனுப்பி வைத்தனர். எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் மையம் கரூர் அருகே காக்காவாடியில் பி.ஏ.வித்யாபவன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 25-ந் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற உள்ளது.

Next Story