சித்தராமையாவின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது தேவேகவுடா பேட்டி


சித்தராமையாவின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 21 April 2018 5:07 AM IST (Updated: 21 April 2018 5:07 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி ஊழல் நிறைந்தது என்றும், இதனால் சித்தராமையாவின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது என்றும் தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு,

முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சி தேசிய தலைவருமான தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நிறைந்து காணப்படுகிறது. இதுபோன்ற ஒரு ஊழல் அரசை நான் பார்த்தது இல்லை. ஜனதா தளம்(எஸ்) கட்சியை அழிக்க வேண்டும் என்பதே சித்தராமையாவின் நோக்கம்.

தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இல்லை. பகுஜன் சமாஜ் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆகிய கட்சிகளின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. அதனால் இந்த தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) வெற்றி பெறுவது உறுதி ஆகும். சித்தராமையா ஒரு குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருந்தால் அந்த தொகுதியை அவர் முன்னேற்றம் அடைய செய்திருப்பார். ஆனால் அதை அவர் செய்யவில்லை.

சாமுண்டீஸ்வரி தொகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் பயணம் செய்ய தொடங்கினார். இது மக்களிடம் எடுபடாது. சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது. சமூகத்தை ஒற்றுமையாக வழிநடத்துபவர்களை தான் மக்கள் ஆதரிப்பார்கள். லிங்காயத் சமூகத்தை சித்தராமையா உடைத்தார். இதுபோல் சமூகத்தை உடைப்பவர்களுக்கு மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள்.

2 தொகுதிகளில் போட்டியிட சித்தராமையா திட்டமிட்டுள்ளார். இது அவர் மீது எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தியுள்ளது. சாமுண்டீஸ்வரி தொகுதியில் வெற்றி பெற முடியாது என்பதால் பாதாமி தொகுதியில் களம் இறங்க சித்தராமையா முடிவு செய்துள்ளார் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

சாமுண்டீஸ்வரி தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். எங்கள் கட்சியை அழிக்க முயற்சி செய்யும் சித்தராமையாவுக்கு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள். சித்தராமையா அரசு மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. இதை வரிசைப்படுத்த முடியாது. இதுபற்றி மக்களுக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்.

கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மோசமான ஆட்சியை மக்கள் பார்த்துவிட்டனர். அதனால் இந்த முறை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு மக்கள் ஓட்டுப்போடுவார்கள். அந்த கட்சிகளின் சார்பில் ஊழல் புகார்களுக்கு ஆளானவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் மிக தெளிவாக உள்ளனர். அதனால் எங்கள் கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள். ஊழல் கறை படிந்தவர்களை ஆதரிக்க மக்கள் தயாராக இல்லை.

அரசியலில் லிங்காயத் சமூகம் பலம் வாய்ந்ததாகவே உள்ளது. அந்த சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்கி இருப்பதால் அவர்கள் காங்கிரசுக்கு ஓட்டுப்போடுவார்கள் என்பது தவறு. அரசியலில் பலத்தை இழக்க அந்த சமூகம் விரும்பாது. ஆயினும் லிங்காயத்துகள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை கணிக்க முடியாது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட யாரையும் நான் தேவை இல்லாமல் தாக்கி பேச மாட்டேன். என்னை விமர்சிக்கும் வரை மோடியை தாக்கி பேசமாட்டேன்.

பா.ஜனதாவின் ‘பி டீம்‘ என்று எங்கள் கட்சியை ராகுல் காந்தி விமர்சித்தார். அவர் இளைஞர். அவரை நான் விமர்சிக்க மாட்டேன். சிலர் அவரை தவறாக வழிநடத்தி இருப்பார்கள். அவருக்கு எதிராக நான் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டேன். எங்கள் கட்சியை காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினர் குறைத்து மதிப்பிடுகிறார்கள். எங்கள் கட்சியின் பலம் என்ன என்பதை இந்த தேர்தலில் நிரூபிப்பேன். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவால் கைவிடப்பட்டவர்களுக்கு டிக்கெட் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார். 

Next Story