குடிநீர்ப் பிரச்சினைக்கு புதுமைத் தீர்வு!
குடிநீர்ப் பற்றாக்குறை, இன்று உலகளாவிய பிரச்சினையாக மாறிவருகிறது. அதற்குத் தீர்வு காண முயல்கிறது, ஓர் இளைஞர் அணி.
ஸ்வப்னில் ஸ்ரீவஸ்தவ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து, இது தொடர்பான ஆய்வகங்களை ஐதராபாத், பெங்களூருவில் தொடங்கி யிருக்கிறார்கள். அதன்மூலம், வெறும் காற்றில் இருந்து குடிநீரைத் தயாரிக்கிறார்கள்.
தங்களின் புதுமை முயற்சிக்கு உலகளாவிய அங்கீகாரம் பெறும் வகையில் ஒரு சர்வதேசப் போட்டியிலும் இக்குழு பங்கேற்கவிருக்கிறது. ஆனால் அந்தப் போட்டியின் பல கோடி ரூபாய் பரிசுத் தொகையை வெல்வதற்கு, தற்போது தினமும் சுமார் 150 லிட்டர் குடிநீர் தயாரிக்கும் இவர்களின் தொழில்நுட்பத்தை, தினசரி 2 ஆயிரம் லிட்டர் தயாரிக்கக்கூடியதாக உயர்த்த வேண்டும்.
இதுகுறித்து ஸ்ரீவஸ்தவ் கூறுகையில், ‘‘நாங்கள் தற்போது பயன்படுத்துவது, காற்றைச் சுருக்கும் முறை. இதன்படி, காற்றை உறைநிலை வெப்பநிலைக்குக் கொண்டுவந்து, அப்போது உருவாகும் நீராவியை தண்ணீராக மாற்றுகிறோம். பின் அதனுடன் தாது உப்புகளைச் சேர்ந்து குடிநீராக்குகிறோம். இதில், காற்றை அழுத்தத்துக்கு உள்ளாக்குவதற்கு மின்சாரம் தேவைப்படுகிறது. தவிர, ஈரப்பதம் குறைந்த பகுதிகளில் இம்முறை சரிவராது.
அத்துடன், நாங்கள் பங்கேற்கும் சர்வதேசப் போட்டியில், நூறு சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. எனவே, சூரிய மின்சக்தி கொண்டு புது நுட்பத்தில் காற்றில் இருந்து அதிகளவில் தண்ணீரை உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்’’ என்கிறார்.
தங்கள் முயற்சியெல்லாம் முழுக்க முழுக்க இயற்கைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீவஸ்தவ் அணி நினைப்பதால், தாங்கள் தயாரிக்கும் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்கமாட்டார்களாம்.
‘அரசாங்கம் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, தேவையுள்ள கிராம மக்களுக்கு எங்கள் குடிநீரை இலவசமாக வழங்குவோம்’ என்று உறுதிபடத் தெரிவிக்கிறார்கள்.
பாராட்டுக்குரிய செயல்!
Related Tags :
Next Story