திருப்பத்தூர் அருகே மண் சரிவில் சிக்கி பெண் பலி


திருப்பத்தூர் அருகே மண் சரிவில் சிக்கி பெண் பலி
x
தினத்தந்தி 21 April 2018 10:00 PM GMT (Updated: 21 April 2018 6:39 PM GMT)

திருப்பத்தூர் அருகே ஆற்றில் மணல் அள்ளியபோது மண் சரிந்து பெண் ஒருவர் பலியானார். சிறுவன் படுகாயமடைந்தான்.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது நல்லிப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சேது. இவருடைய மனைவி தமிழரசி(வயது 39). கணவன்-மனைவி 2 பேரும், அதே ஊரைச் சேர்ந்த பழனியப்பன் மகன் மங்களேசுவரன்(15), செல்வமணி மகன்கள் கார்த்திக்(16), அஜீத்(14), செங்குட்டுவன்(58) ஆகியோரும் வீடு கட்டுவதற்காக நல்லிபட்டி அருகே மணிமுத்தாறு ஆற்றில் மணல் அள்ளுவதற்காக நேற்று சென்றனர். மதிய நேரத்தில் அவர்கள் சாக்குப்பையில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். ஏற்கனவே மணல் திருடப்பட்டு ஆற்றில் பெரிய பள்ளம் காணப்பட்ட இடத்தில் அவர்கள் மண் அள்ளியுள்ளனர். அப்போது பள்ளத்தின் மேல் பகுதியில் இருந்த மண் திடீரென்று சரிந்தது.

மண் சரிந்ததில் தமிழரசி மற்றும் மங்களேசுவரன் ஆகியோரை மண் மூடி, அதில் சிக்கிக்கொண்டனர். இதனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த சேது மற்றும் அவருடன் வந்தவர்கள் தமிழரசி மற்றும் மங்களேசுவரனை மீட்க போராடினர். சிறிது நேரத்தில் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே தமிழரசி பரிதாபமாக இறந்துபோனார். மங்களேசுவரனுக்கு திருப்பத்தூர் ஆஸ்பத்திரியில் முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைகாக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான்.

இந்த சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story