விவசாயியை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த 7 பேர் கைது 10 பவுன் மீட்பு


விவசாயியை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த 7 பேர் கைது 10 பவுன் மீட்பு
x
தினத்தந்தி 22 April 2018 3:45 AM IST (Updated: 22 April 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

வேலகவுண்டம்பட்டி அருகே விவசாயியை தாக்கி கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளை போன 10 பவுன் நகைகளை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அக்கலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 60). விவசாயி. கடந்த 6-ந் தேதி இரவு இவரது கை, கால்களை கட்டிப்போட்டு அவரிடம் இருந்து தங்கசங்கிலி, மோதிரம் உள்ளிட்ட நகைகளை மர்ம கும்பல் கொள்ளை அடித்து சென்றது. இதுகுறித்து முத்துசாமி கொடுத்த புகாரின் பேரில் வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து துப்பு துலக்க பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தி பிரிவு ரோட்டில் நேற்று காலை 7 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கொலை வழக்கில் தொடர்பு

அப்போது சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் குமாரபாளையத்தை சேர்ந்த கோபி என்கிற கோபிநாத் (24) சக்திவேல் (21) கேசவன் (22) என்பதும், இவர்கள் தேவா என்கிற தேவராஜ் (22) சரவணன் (22), பிரகாஷ் (23) மற்றும் ரவி (20) ஆகியோருடன் சேர்ந்து முத்துசாமி வீட்டில் நகைகளை கொள்ளை அடித்ததும் தெரியவந்தது.

இவர்களில் கோபிநாத் இந்த கொள்ளைக்கு மூளையாக இருந்து செயல்பட்டு இருப்பதும், இவர் கடந்த 2014-ம் ஆண்டு அவருடைய நண்பர் நந்தகுமார், அருண்குமார் ஆகியோருடன் சேர்ந்து குமாரபாளையம் காளியம்மன் கோவில் அருகே தந்தை மற்றும் மகளை அடித்து கொலை செய்து விட்டு, அங்கிருந்த நகை மற்றும் பணம் திருடிய வழக்கில் சிறை சென்று வந்தவர் என்பதும் தெரியவந்தது.

7 பேர் கைது

தற்பொழுது குமாரபாளையத்தில் தனியார் ஆம்புலன்ஸில் வேலை செய்து வருவதும், வழக்கு சம்பந்தமாக நாமக்கல் கோர்ட்டுக்கு வந்து செல்்லும்போது முத்துசாமி மோதிரம், தங்க சங்கிலி போட்டு இருப்பதை பார்த்து ஆசைப்பட்டு அவரிடம் நட்பாக பேசி அவர் வீட்டிற்கு வந்து சென்று இருப்பதும், அவரிடம் பணம் இருக்கும் என்று திட்டமிட்்டு மற்ற நண்பர்களையும் சேர்த்து கடந்த 6-ந் தேதி இரவு மூன்று மோட்டார் சைக்கிள்களில் 7 பேரும் வேலகவுண்டம்பட்டி வந்து, முத்துசாமியை கட்டிப்போட்டு, அடித்து மிரட்டி அவர் அணிந்து இருந்த தங்க சங்கிலி, 3 மோதிரம், அரைஞாண் கயிறு, ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் முத்துசாமி வீட்டில் கொள்ளை போன 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை போலீசார் மீட்டனர். மேலும் கோபிநாத் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார். 

Next Story