கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதி: ரெயிலை மறிக்க காங்கிரசார் முயற்சி


கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதி: ரெயிலை மறிக்க காங்கிரசார் முயற்சி
x
தினத்தந்தி 22 April 2018 4:30 AM IST (Updated: 22 April 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்வர தாமதமானதால் ஆத்திரமடைந்த காங்கிரசார் அனந்தபுரி ரெயிலை மறிக்க முயன்றனர்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னைக்கு தினமும் மாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து 5.20 மணிக்கு புறப்படும். நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்துக்கு 5.40 மணிக்கு வர வேண்டும்.

ஆனால் கடந்த சில மாதங்களாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமான நேரத்தை விட தாமதமாக வருகிறது. தினமும் ஒரு மணி நேரம் அல்லது 45 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கன்னியாகுமரி ரெயில் தினமும் தாமதமாக வருவதற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ரெயில் வர தாமதம் ஆவதால் தான் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தாமதம் ஏற்படுகிறது‘ என்றனர். அதாவது பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரிக்கு ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு மதியம் 2.50 மணிக்கு வரும். பின்னர் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்லும்.

இந்த ரெயில் தான் என்ஜின் மாற்றம் செய்யப்பட்டு, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சென்னைக்கு புறப்படுகிறது. ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ரெயில் நாள் தோறும் 30 நிமிடங்கள் வரை தாமதமாக வருகிறது. அதன் பிறகு அந்த ரெயிலை சென்னைக்கு புறப்பட தயார் செய்வதற்கு 30 நிமிடங்கள் வரை தேவைப்படுகிறது. இதன் காரணமாக தான் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட கால தாமதம் ஆகிறது என்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்றும் நாகர்கோவில் ரெயில் நிலையம் வர தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதனையடுத்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை செல்வதற்காக குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராபர்ட்புரூஸ் மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர்கள் செல்வராஜ், திருத்துவதாஸ் ஆகியோர் வந்திருந்தனர். இவர்களும் ரெயிலுக்காக காத்திருந்தனர்.

இதற்கிடையே கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம் போல் மாலை 6 மணிக்கு வந்தது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்ற பின்னர் தான் அனந்தபுரி செல்ல வேண்டும். ஆனால் கன்னியாகுமரி ரெயில் வருவதற்குள் அனந்தபுரி ரெயில் புறப்பட தயாரானது. இதனால் காங்கிரசார் ஆவேசம் அடைந்தனர். கன்னியாகுமரி ரெயில் புறப்பட்ட பின்னர் தான் அனந்தபுரி புறப்பட வேண்டும் என்று கூறிய அவர்கள் திடீரென அனந்தபுரி ரெயில் முன் சென்று ரெயிலை மறித்து போராட்டம் நடத்த முயன்றனர்.

இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே மற்றும் ஆர்.பி.எப். போலீசார் அவர்களை தடுத்தனர். பின்னர் ராபர்ட்புரூஸ் உள்ளிட்ட காங்கிரசாரை ரெயில்வே அதிகாரிகளிடம் போலீசார் அழைத்துச் சென்றனர். அதன் பிறகு காங்கிரசாருடன் ரெயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கன்னியாகுமரி ரெயில் புறப்பட்ட பிறகே அனந்தபுரி ரெயிலை இயக்குவதாக வாக்குறுதி அளித்தனர்.

இதனையடுத்து அவர்கள் சமாதானம் அடைந்தனர். பின்னர் கன்னியாகுமரி ரெயில் 40 நிமிடங்கள் தாமதமாக 6.20 மணிக்கு வந்தது. உடனே ரெயிலில் அவர்கள் புறப்பட்டனர். கன்னியாகுமரி ரெயில் புறப்பட்ட பிறகு 30 நிமிடங்கள் தாமதமாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. இச்சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story