அளக்கரை கூட்டு குடிநீர் திட்ட பணிகளை பேரூராட்சி இயக்குனர் ஆய்வு


அளக்கரை கூட்டு குடிநீர் திட்ட பணிகளை பேரூராட்சி இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 22 April 2018 4:45 AM IST (Updated: 22 April 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மூலம் கோடை சீசனுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் வினியோகம் செய்ய இயக்குனர் அறிவுறுத்தினார்.

கோத்தகிரி,

அளக்கரை கூட்டு குடிநீர் திட்ட பணிகளை பேரூராட்சி இயக்குனர் பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது அவர் கோடை சீசனுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கோத்தகிரி நகர் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஈளாடா தடுப்பணை கோடை காலத்தில் வறண்டு போகிறது. இதனால் நகரில் அடிக்கடி தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக கோத்தகிரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.10 கோடியே 60 லட்சம் மதிப்பில் அளக்கரை கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்ட பணிகள் 95 சதவீதம் நிறைவுபெற்று உள்ள நிலையில் கோத்தகிரி சக்திமலை பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிச்சாமி கோத்தகிரிக்கு வந்தார். பின்னர் அவர் சக்திமலை பகுதியில் நடைபெற்று வரும் அளக்கரை கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்ததுடன் மே மாத இறுதிக்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று குடிநீர் வாரிய வடிகால் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக அளக்கரை கிராம பகுதிக்கு குடிநீர் திட்ட பணிக்காக கட்டப்பட்டுள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து 10-வது காய்கறி கண்காட்சி நடத்தப்படும் நேரு பூங்காவை இயக்குனர் பழனிச்சாமி பார்வையிட்டார். அப்போது அவர் பூங்காவில் மரக்கன்று நடவு செய்தார்.

பின்னர் கோத்தகிரி பகுதிக்கு தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் கோடநாடு அருகே உள்ள ஈளாடா தடுப்பணையை பார்வையிட்டார். மேலும் தடுப்பணையில் தற்போது உள்ள நீர் இருப்பு குறித்தும், கோடை சீசனில் கோத்தகிரி பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் நிர்வாக பொறியாளர் சுப்ரமணி, குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் பீமராஜ், கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் கண்ணன், பொறியாளர் சாதிக்பாட்சா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story