பாதாமி தொகுதியில் சித்தராமையா போட்டியிடுவது உறுதி


பாதாமி தொகுதியில் சித்தராமையா போட்டியிடுவது உறுதி
x
தினத்தந்தி 22 April 2018 4:32 AM IST (Updated: 22 April 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்திருப்பதை தொடர்ந்து பாதாமி தொகுதியில் முதல்-மந்திரி சித்தராமையா போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

பெங்களூரு,

சித்தராமையா நாளை (திங்கட்கிழமை)  பாதாமியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்-மந்திரி சித்தராமையா, மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்ததுடன், வேட்பு மனுவும் தாக்கல் செய்துள்ளார். ஆனால் அந்த தொகுதியில் போட்டியிட்டால் அவர் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்தது. இதையடுத்து, சாமுண்டீஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி என இரு தொகுதிகளில் போட்டியிட முதல்-மந்திரி சித்தராமையா முடிவு செய்தார்.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதே நேரத்தில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டால் சித்தராமையா தோல்வி அடைந்து விடுவார் என்ற பயத்தில் பாதாமியிலும் போட்டியிட முடிவு செய்திருப்பதாக பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடுமையாக தாக்கி பேசி வருகின்றன. இதன் காரணமாக முதல்-மந்திரி சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிடும் முடிவை ராகுல்காந்தி நிராகரித்தார்.

இதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் மட்டுமே முதல்-மந்திரி சித்தராமையா போட்டியிட போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. மேலும் பாதாமி தொகுதிக்கு தேவராஜ் பட்டீல் என்பவர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். ஆனால் 2 தொகுதிகளில் போட்டியிடும் முடிவில் இருந்து சித்த ராமையா பின்வாங்காமல் இருந்தார். அத்துடன் பாதாமி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேவராஜ் பட்டீலுக்கு ‘பி பாரம்’ கொடுக்கப் படாமல் இருந்தது. இந்த நிலையில், சித்தராமையாவின் வற்புறுத்தலுக்கு பணிந்த காங்கிரஸ் மேலிடம் பாதாமி தொகுதியிலும் அவர் போட்டியிட அனுமதி அளித்திருப்பதாக தெரிகிறது.

இதனால் முதல்-மந்திரி சித்தராமையா சாமுண்டீஸ்வரி மற்றும் பாதாமி தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. மேலும் நாளை(திங்கட்கிழமை) பாதாமி தொகுதியில் போட்டியிடுவதற்காக முதல்-மந்திரி சித்தராமையா வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், முதல்-மந்திரியின் சுற்றுப்பயண விவரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story