போலி வாக்காளர்கள் மீது கடும் நடவடிக்கை மாநில தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை


போலி வாக்காளர்கள் மீது கடும் நடவடிக்கை மாநில தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 April 2018 4:35 AM IST (Updated: 22 April 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

போலி வாக்காளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் எச்சரித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி (சனிக் கிழமை) நடக்கிறது. இந்த சட்டசபை தேர்தலையொட்டி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் தொடர்பான புகைப்படம் மற்றும் கார்ட்டூன் கண்காட்சி பெங்களூரு சித்ரகலா பரிஷத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் தொடங்கி வைத்தார். மேலும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த புகைப்படங்கள் மற்றும் கார்ட்டூன்களை அவர் பார்வையிட்டார்.

பின்னர் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. குறிப்பாக மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுபோல, சித்ரகலா பரிஷத்திலும் தேர்தல் தொடர்பாக புகைப்படம் மற்றும் கார்ட்டூன் கண்காட்சிக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. ஓவிய கலைஞர்கள் சிறப்பாக தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் ஒரே குறிக்கோள் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும் என்பது தான். அதன்படி, இந்த முறை நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானவர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவரும் ஆர்வமாக வந்து ஓட்டுப்போட வேண்டும். மே 12-ந் தேதி 2-வது சனிக்கிழமை என்பதால், அன்றைய தினம் விடுமுறை இருந்தாலும் வாக்காளர்கள் தவறாமல் ஓட்டுப்போடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் வாக்குப்பதிவில் பாதிப்பு ஏற்படாது. வாக்குப்பதிவு நேரமும் ஒரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் எல்லா விதமான நடவடிக்கையும் எடுத்து வருகிறது. ஆனாலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மக்கள் நினைத்தால் மட்டுமே பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க முடியும். சித்ரதுர்கா மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பொருட்களை, மக்களே தீவைத்து எரித்துள்ளனர். இதுபோல, ஒவ்வொருவரும் செய்ய முன்வர வேண்டும்.

பெங்களூருவில் 19 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களே போலி வாக்காளர்களாக இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால் அவை உண்மையல்ல. அவ்வாறு வரும் செய்திகள் தவறானது. அப்படி போலி வாக்காளர்கள் இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த விதமான பாரபட்சமும் காட்டப்படாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கும்.

இவ்வாறு சஞ்சீவ்குமார் கூறினார்.

பேட்டியின் போது பெங்களூரு தேர்தல் அதிகாரி மஞ்சுநாத் பிரசாத் உடன் இருந்தார். 

Next Story