கருக்கலைப்பு விவகாரம்: கைதான அரசு பெண் டாக்டருக்கு திடீர் உடல் நலக்குறைவு


கருக்கலைப்பு விவகாரம்: கைதான அரசு பெண் டாக்டருக்கு திடீர் உடல் நலக்குறைவு
x
தினத்தந்தி 22 April 2018 4:15 AM IST (Updated: 22 April 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

கருக்கலைப்பு விவகாரத்தில் கைதான அரசு பெண் டாக்டருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 சேலம், 

தலைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தவர் தமயந்தி ராஜ்குமார் (வயது 53). இவர், ஆத்தூரில் நடத்தி வந்த மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்று பார்த்து கூறி வந்ததாக புகார் எழுந்தது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் இன்பசேகரன் உத்தரவின்பேரில் இணை இயக்குனர் டாக்டர் கமலகண்ணன் தலைமையில் அதிகாரிகள் அவரது மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது, டாக்டர் தமயந்தி ராஜ்குமார், கர்ப்பிணிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கூறியதும், அவர் கருக்கலைப்பு செய்வதற்கு குறிப்பிட்ட அளவில் பணம் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் பிடித்து ஆத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும், அவரது ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் டாக்டர் தமயந்தி ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர், அவரை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு விடுமுறை என்பதால் நேற்று காலையில் சேலம் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். அப்போது, அவர் தனக்கு நெஞ்சு வலிக்கிறது என்றும், உடல்நிலை சரியில்லை என்றும், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், உடனே ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர் தமயந்தி ராஜ்குமார் அழைத்து வரப்பட்டார்.

பின்னர், ஆஸ்பத்திரியில் தனி அறையில் அவர் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆஸ்பத்திரி டீன் கனகராஜ் அங்கு வந்து தமயந்தி ராஜ்குமாருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அவரது காலை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில், எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. அவருக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். 2 அல்லது 3 நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்றும், அதன்பிறகு அவர் சேலம் பெண்கள் தனி சிறையில் அடைக்கப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story