தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதை மத்தியஅரசு கைவிட வேண்டும்


தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதை மத்தியஅரசு கைவிட வேண்டும்
x
தினத்தந்தி 23 April 2018 4:15 AM IST (Updated: 23 April 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதை மத்தியஅரசு கைவிட வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் நேற்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர் கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவ மாணவர்களுக்கு எதிரான கொள்கைகளை மத்தியஅரசு நடைமுறைப்படுத்துகிறது. இந்திய மருத்துவ கவுன்சிலை ஒழித்துவிட்டு அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்ற புதிய அமைப்பை கொண்டு வர முயற்சி செய்கிறது. இந்த அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் நீட் தேர்வு என்பது சட்டப்பூர்வமாக்கப்பட்டு விடும். மருத்துவ படிப்பை முடித்துவிட்டு மாணவர்கள் தேசிய ஒருமை தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றால் தான் டாக்டராக பதிவு செய்து பணி புரிய முடியும். இல்லையென்றால் டாக்டராக பணி புரிய முடியாது.

ஏற்கனவே பல்கலைக்கழக தேர்வுகளை எழுதி அதில் தேர்ச்சி பெற்று வரும் நிலையில் புதிதாக ஒரு தேர்வை மத்தியஅரசு கொண்டு வருவது தேவையற்றதாகும். இது மருத்துவ மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மாணவர்களுக்குள் பாரபட்சத்தை உருவாக்கும். எனவே தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டு வரும் முயற்சியை மத்தியஅரசு கைவிட வேண்டும். இணைப்பு படிப்பையும் மத்தியஅரசு உருவாக்குகிறது. ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற படிப்பு படித்தவர்கள் அந்தந்த துறைகளில் பணி புரிந்தால் தான் மக்களுக்கு நல்லது. மருத்துவதுறைக்கும் நல்லது.

ஆனால் ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்பு படித்தவர்களும் நவீன விஞ்ஞான மருத்துவத்தையும் படிக்கலாம். அதில் பயிற்சி பெறலாம் என்று மத்தியஅரசு புதிய திட்டத்தை கொண்டு வருவது குழப்பத்தை ஏற்படுத்தும். மக்களுக்கு தரமான, நவீன மருத்துவம் கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் யார்? யார்? எந்தந்த துறைகளில் பயிற்சி பெறுகிறார்களோ அந்த துறைகளில் தான் பணியாற்ற வேண்டும். அதைவிட்டுவிட்டு நவீன விஞ்ஞான மருத்துவத்திற்கு எதிராக மத்தியஅரசு செயல்படுவது தேவையற்றது.

அடுத்தமாதம்(மே) 6-ந் தேதி நீட் தேர்வை மாணவர்கள் எழுத போகிறார்கள். திருநெல்வேலியை சேர்ந்த மாணவர்களுக்கு எர்ணாகுளம், ஹைதராபாத் போன்ற நகரங்களில் மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எப்படி அங்கே செல்வார்கள். மருத்துவ சேவையை கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கு செல்லும் வகையில் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமாக மத்தியஅரசு செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் மருத்துவ மாணவர்களின் சமகால பிரச்சினைகளும், தீர்வுகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் தஞ்சையில் நடந்தது. இதற்கு மருத்துவ மாணவர் ஹரிகணேஷ் தலைமை தாங்கினார். மாணவி அட்சயா முன்னிலை வகித்தார். மாணவி சிவப்பிரியா வரவேற்றார்.

கருத்தரங்கை தஞ்சை மருத்துவகல்லூரி முன்னாள் முதல்வர் இளங்கோவன் தொடங்கி வைத்து மருத்துவ கல்வியில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்போம் என்ற நூலை வெளியிட்டு பேசினார். இதில் மருத்துவகல்லூரி முன்னாள் முதல்வர் சங்கரநாராயணன், டாக்டர்கள் மருதுதுரை, ஜேசுதாஸ், ராஜேந்திரன், தமிழ்மணி, கிருஷ்ணமூர்த்தி, தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை விளக்கி சமூக சமத்துவதற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் பேசினார்.

முடிவில் மருத்துவ மாணவர் செல்வக்குமார் நன்றி கூறினார். 

Next Story