நூதன முறையில் போலீசார் விழிப்புணர்வு
ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து நூதன முறையில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கம்பம்,
தேனி மாவட்டத்தில், விபத்துக்களை தடுக்கும் வகையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஹெல்மெட் (தலைக்கவசம்) அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கின்றனர். இருப்பினும் மோட்டார் சைக்கிள் ஓட்டும் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிவதில்லை.
இதனையடுத்து ஹெல்மெட் அணிவது தொடர்பாக நூதன விழிப்புணர்வு பிரசாரத்தில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கம்பம் வடக்கு போலீசார், கம்பம்-தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கவில்லை. அதற்கு பதிலாக, நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், அங்கு வரிசையாக போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர வைத்தனர்.
அவர்களுடன் வந்த குடும்பத்தினரும் அங்கு உட்கார வைக்கப்பட்டனர். ஹெல்மெட் அணியாமல், மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்று விபத்தில் சிக்கி உயிர் இழந்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனரை அவர்களுக்கு போலீசார் காட்டினர்.
விலை மதிப்பு மிக்க உயிரை விபத்தில் இழந்து விடக்கூடாது என்றும், ஒவ்வொருவரையும் சார்ந்து அவருடைய குடும்பத்தினர் உள்ளனர் என்றும் போலீசார் எடுத்துரைத்தனர். மேலும் கணவர் வேலைக்கு செல்லும்போது, மோட்டார் சைக்கிள் சாவியை எடுத்துக்கொடுப்பதற்கு முன்பு ஹெல்மெட்டையும் மனைவிகள் எடுத்து கொடுக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.
Related Tags :
Next Story