கார் மீது அரசு பஸ் மோதி கரும்பு ஆலை முன்னாள் அதிகாரி சாவு
வேடசந்தூர் அருகே கார் மீது அரசு பஸ் மோதியதில் கரும்பு ஆலை முன்னாள் அதிகாரி பரிதாபமாக இறந்தார். மேலும் டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேடசந்தூர்,
விழுப்புரம் மாவட்டம் எடுத்தனூரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 60). இவர் அங்குள்ள கரும்பு ஆலையில் தலைமை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அவருடைய உறவினர் வீட்டு பூப்புனித நீராட்டு விழா, கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காக தண்டபாணி உறவினர்களுடன் காரில் பள்ளப்பட்டிக்கு வந்தார்.
இந்தநிலையில் நேற்று அவர், உறவினர்களுடன் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டார். இதையடுத்து அவர்கள் காரில் பழனிக்கு புறப்பட்டனர். காரை விழுப்புரம் மாவட்டம் கடம்பூரை சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் ஓட்டினார். வேடசந்தூர்-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் விட்டல்நாயக்கன்பட்டிக்கு அருகே கார் வந்து கொண்டிருந்தது.
பாதை மாறி வந்ததால் அந்த வழியாக நடந்து சென்ற ஒருவரிடம், காரை நிறுத்தி பழனிக்கு செல்ல வழி கேட்டுள்ளனர். அப்போது அந்த நபர் பாதை மாறி வந்துவிட்டதாகவும், திரும்பவும் வேடசந்தூருக்கு சென்று அங்கிருந்து பழனிக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து டிரைவர் காரை திருப்பியுள்ளார்.
அந்தவேளையில் ஓசூரில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ், காரின் மீது பயங்கரமாக மோதியது. கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், தண்டபாணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் வந்த தண்டபாணியின் உறவினர்கள் எடுத்தனூரை சேர்ந்த ராஜேந்திரன் (64), திருவண்ணாமலை மாவட்டம் மேல்முடியனூரை சேர்ந்த பிரபாகரன் (45), அவருடைய தாயார் தேவிகா மற்றும் டிரைவர் வைத்தியநாதன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான தண்டபாணியின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி கோவிலுக்கு சென்றபோது விபத்தில் சிக்கி கரும்பு ஆலை முன்னாள் அதிகாரி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story