பா.ஜனதாவில் மீண்டும் தடம் பதிக்க தயாராகும் ரெட்டி


பா.ஜனதாவில் மீண்டும் தடம் பதிக்க தயாராகும் ரெட்டி
x
தினத்தந்தி 23 April 2018 10:45 PM GMT (Updated: 2018-04-24T00:47:36+05:30)

தேர்தலில் போட்டியிட 2 பேருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டு உள்ளதன் மூலம், கர்நாடக பா.ஜனதாவில் மீண்டும் தடம் பதிக்க ரெட்டி சகோதரர்கள் தயாராகி வருவது தெளிவாக தெரிகிறது. இதில் ஸ்ரீராமுலுவுக்கு ஆதரவாக ஜனார்த்தனரெட்டி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கனிம சுரங்க தொழிலில் கொடி கட்டி பறக்கும் ரெட்டி சகோதரர்கள் ஜனார்த்தனரெட்டி, கருணாகரரெட்டி, சோமசேகரரெட்டி. இவர்கள் மூன்று பேருமே கர்நாடக பா.ஜனதாவில் மிக முக்கியமான தலைவர்களாக வலம் வந்தவர்கள். கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது ஜனார்த்தனரெட்டி, கருணாகரரெட்டி ஆகியோர் மந்திரிகளாக பணியாற்றினர்.

ரெட்டி சகோதரர்களின் குடும்ப நண்பர் ஸ்ரீராமுலுவும் மந்திரியாக இருந்தார். சோமசேகரரெட்டி எம்.எல்.ஏ. பதவியுடன் கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பதவியையும் வகித்தார். அப்போது பா.ஜனதாவில் ரெட்டி சகோதரர்கள் கொடி கட்டி பறந்தனர். அவர்களை யாருமே எதிர்க்க முடியாத நிலை இருந்தது. அவர்கள் ஆட்சியிலும், கட்சியிலும் மிக அதிகாரம் மிக்கவர்களாக வலம் வந்தனர்.

ஜனார்த்தனரெட்டி நடத்தும் கனிம சுரங்க நிறுவனங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் ஜனார்த்தனரெட்டி கைது செய்யப்பட்டு பெங்களூரு மற்றும் ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகளில் ஜாமீன் வழங்க நீதிபதிக்கு லஞ்சம் வழங்கியதாக எழுந்த புகாரில் ஜனார்த்தனரெட்டி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுமார் 3½ ஆண்டுகள் அவர் சிறையில் காலத்தை கழித்தார். இந்த வழக்குகளை தொடர்ந்து ஜனார்த்தனரெட்டியை கட்சியில் இருந்து பா.ஜனதா நீக்கியது. ஜனார்த்தனரெட்டி மீதான வழக்குகளில் விசாரணை நடைபெற்றது வருகிறது. பல்லாரிக்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜனார்த்தனரெட்டிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஜனார்த்தனரெட்டியை நீக்கியதால், பா.ஜனதாவை விட்டு அவரது குடும்ப நண்பர் ஸ்ரீராமுலுவும் விலகி பி.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அந்த கட்சி 4 இடங்களை பிடித்தது. அதன்பின்னர் ஸ்ரீராமுலு தனது கட்சியை பா.ஜனதாவுடன் இணைத்தார்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக கட்சி பணியாற்ற ஜனார்த்தனரெட்டி மிக ஆவலோடு காத்திருக்கிறார். பா.ஜனதாவுக்கும், ஜனார்த்தனரெட்டிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கூறினார். இதற்கு பதிலளித்த ஜனார்த்தனரெட்டி, என் ரத்தத்தில் பா.ஜனதா ரத்தம் ஓடுகிறது. என்னையும், பா.ஜனதாவையும் பிரிக்க முடியாது என்று கூறினார்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் ரெட்டி சகோதரர்களில் 2 பேருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது கருணாகரரெட்டிக்கு ஹரப்பனஹள்ளி தொகுதியிலும், சோமசேகரரெட்டிக்கு பல்லாரி நகர் தொகுதியிலும் பா.ஜனதா டிக்கெட் வழங்கியுள்ளது. மேலும் ஸ்ரீராமுலுவின் உறவினர்கள் சன்ன பகீரப்பாவுக்கு பல்லாரி புறநகர் தொகுதியிலும், மற்றொரு உறவினர் சுரேஷ்பாபு, கம்பளி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

மேலும் சித்ரதுர்கா மாவட்டம் முலகால்மூரு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீராமுலுவை ஆதரித்து நடைபெற்ற பா.ஜனதா பிரசார கூட்டத்தில் எடியூரப்பாவுடன் ஜனார்த்தனரெட்டியும் பகிரங்கமாகவே கலந்து கொண்டார். பல்லாரி பகுதியில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஸ்ரீராமுலுவுக்கு ஆதரவாக ஜனார்த்தனரெட்டி தீவிர பிரசாரத்திலும் ஈடுபட உள்ளார். இதன் மூலம் கர்நாடக பா.ஜனதாவில் மீண்டும் தடம் பதிக்க ரெட்டி சகோதரர்கள் தயாராகிவிட்டனர் என்பதையே இது காட்டுவதாக உள்ளது.

1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி முதல் முறையாக பல்லாரி மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பல்லாரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் சுஷ்மா சுவராஜ் நிறுத்தப்பட்டார். இதில் சோனியா காந்தி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story