காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க.-தோழமை கட்சியினர் போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க.-தோழமை கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 24 April 2018 4:30 AM IST (Updated: 24 April 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சியினர் நடத்திய மனித சங்கிலி போராட்டம் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

திருச்சி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி நேற்று மாலை திருச்சியில் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திருச்சி ஜங்ஷன் ரவுண்டானாவில் இருந்து பாலக்கரை, மெயின்கார்டு கேட் வழியாக கலைஞர் அறிவாலயம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் போலீசார் காந்திமார்க்கெட் வரை மட்டுமே மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்கி இருந்தனர். இதனால் ஜங்ஷன் ரவுண்டானாவில் இருந்து காந்தி மார்க்கெட் வரை சாலையின் இடதுபுறம் மட்டும் தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் கைகோர்த்தபடி அணிவகுத்து நின்றனர்.

மாலை 4.30 மணிக்கு இந்த போராட்டம் தொடங்கியது. திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. மனித சங்கிலி போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகி மகேந்திரன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர்கள் கலை, கோவிந்தராஜ், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, ஸ்ரீதர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி), சுரேஷ் (இந்திய கம்யூனிஸ்டு), அருள் (விடுதலை சிறுத்தைகள்) மற்றும் திராவிடர் கழகம், பார்வர்டு பிளாக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் உள்பட திரளானவர்கள் மனித சங்கிலியில் பங்கேற்று கைகோர்த்து நின்றனர்.

மனித சங்கிலியில் பங்கேற்றவர்கள், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், பல்லாண்டு கால காவிரி பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓயமாட்டோம் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். மாலை 4.30 மணி முதல் 5.15 மணி வரை 45 நிமிடம் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் ஜங்ஷன் முதல் காந்திமார்க்கெட் வரை இடைவெளி இன்றி கைகோர்த்தபடி அணிவகுத்து நின்றனர். இதனால் டவுன் பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

நேரு எம்.எல்.ஏ. ஒரு மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு ஜங்ஷன் முதல் காந்திமார்க்கெட் வரை சென்று மனித சங்கிலியில் அணிவகுத்து நின்றவர் களை உற்சாகப்படுத்தினார்.


Next Story