காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க., கூட்டணி கட்சியினர் போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க., கூட்டணி கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 23 April 2018 10:45 PM GMT (Updated: 2018-04-24T02:39:15+05:30)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க., கூட்டணி கட்சியினர் தர்மபுரியில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தி.மு.க. தலைமையில் பல்வேறு கூட்டணி கட்சிகள் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேற்று மாலை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முதல் 4 ரோடு வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பி.என்.பி. இன்பசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக நிர்வாகி ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் ஜெயந்தி, ஜானகிராமன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுபேதார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள் அன்வர்பாஷா, நிஜாமுதீன் உள்பட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்கள் சாலையின் ஓரத்தில் வரிசையாக கைகளை கோர்த்தபடி நின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் மாதையன், துணைசெயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, பொருளாளர் தர்மச்செல்வன், நகரசெயலாளர் தங்கராஜ், காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் செந்தில்குமார், திராவிடர்கழக நிர்வாகிகள் செல்வி, மாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி ராமன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story