ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை சார்பில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டம்


ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை சார்பில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 25 April 2018 4:15 AM IST (Updated: 25 April 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய முரண்பாடுகளை களைந்திட கோரி திருவாரூரில், ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். ஒப்பந்த, தொகுப்பூதிய கால பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் பணிவரன் முறைப்படுத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஆசிரியர் இயக்கங்கள் வலியுறுத்தி வந்தது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ அமைப்பின் சார்பில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டத்தில்் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று திருவாரூரில் விடைத்தாள் திருத்தும் பணியினை ஆசிரியர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். இதில் தமிழக தமிழாசிரியர் கழக நிர்வாகி நலங்கிள்ளி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க நிர்வாகி ரவி, பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாநில சட்ட ஆலோசகர் ஆண்ட்ரூஸ், மாவட்ட தலைவர் அன்பரசன், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்க நிர்வாகி பஞ்சாபிகேசன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story