மதுக்கடை திறக்க எதிர்ப்பு மது பாட்டில்களை உடைத்து பெண்கள் போராட்டம்
பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலையில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் மதுக்கடையில் இருந்த மதுபாட்டில்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே திருநீர்மலை பேரூராட்சி அலுவலகத்தையொட்டி உள்ள உய்யாரி அம்மன் கோவில் தெருவில் வாடகை கட்டிடத்தில் அரசு மதுக்கடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
இதற்கு அப்பகுதி மக்கள், “மதுக்கடை திறந்தால் குடியிருப்பு பகுதியில் கடும் பாதிப்பு ஏற்படும். பெண்கள் குழந்தைகள் அந்த வழியாக செல்ல முடியாது. எனவே ஊரின் உள்ளே மதுக்கடை திறக்கக்கூடாது” என கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மதுபான பாட்டில்கள்
ஆனால் அதனை பொருட்படுத்தாமல் மதுக்கடையை திறப்பதற்கான வேலைகள் தொடர்ந்து நடந்து வந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லாரியில் மதுபான பாட்டில்கள் கொண்டு வரப்பட்டு, இந்த மதுக்கடையில் இறக்கி வைக்கப்பட்டன.
இதை பார்த்த அப்பகுதி பெண்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையில் வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை அட்டை பெட்டியுடன் தூக்கி வந்து சாலையில் போட்டு உடைத்தனர். இதில் ஏராளமான மதுபான பாட்டில்கள் சேதமானது.
16 பேரிடம் விசாரணை
இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருநீர்மலை பகுதியை சேர்ந்த 16 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story