திருப்பூரில் கடன் பிரச்சினை காரணமாக பனியன் நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை


திருப்பூரில் கடன் பிரச்சினை காரணமாக பனியன் நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 April 2018 3:45 AM IST (Updated: 25 April 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கடன் பிரச்சினை காரணமாக பனியன் நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர்,

திருப்பூர் மாஸ்கோ நகர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மகன் மனோஜ்பிரவீன்(வயது 28). இவர் சொந்தமாக பனியன் நிறுவனம் வைத்து ஜாப்ஒர்க் அடிப்படையில் ஆடைகளை தைத்துக்கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கும், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த பூரணி(22) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தற்போது பூரணி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்துக்காக, பூரணி கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனோஜ்பிரவீனுக்கு தொழில் சம்பந்தமாக கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மனோஜ்பிரவீனின் வீட்டில், அவருடைய பெற்றோரும் இருந்துள்ளனர். இரவு 12 மணி வரை அவர் டி.வி. பார்த்துள்ளார். அதன்பிறகு ஒரு அறைக்கு சென்று அவர் தூங்க சென்றுள்ளார். அதிகாலை 4 மணிக்கு மனோஜ்பிரவீன் எழுந்து வந்து தண்ணீர் குடித்து விட்டு அறைக்குள் சென்றுள்ளார். அதிகாலை 5 மணி அளவில் அறைக்குள் சத்தம் கேட்க, பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்தபோது அறைக்குள் மின்விசிறியில், சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் மனோஜ்பிரவீன் காணப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது மனோஜ் பிரவீனின் உயிர் பிரிந்து இருந்தது. இதையடுத்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து பூரணி திருப்பூர் வந்து, மனோஜ்பிரவீனின் உடலை பார்த்து கதறியது பரிதாபமாக இருந்தது. கடன் பிரச்சினை காரணமாக பனியன் நிறுவன உரிமையாளர் இறந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில் கடன் பிரச்சினை காரணமாக மனோஜ்பிரவீன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story