கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி 2 பெண்கள் படுகாயம்


கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி 2 பெண்கள் படுகாயம்
x
தினத்தந்தி 25 April 2018 4:00 AM IST (Updated: 25 April 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலியில் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்கு டெல்லோஸ் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் எஸ்டேட் வேலைக்கு சென்றனர். மாலை 5 மணிக்கு வேலை முடிந்து 10 தோட்ட தொழிலாளர்கள் தங்களது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

எஸ்டேட்டில் இருந்து வீட்டுக்கு சுமார் 2 கி.மீட்டர் தூரம் உள்ளது. மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் தோட்ட தொழிலாளர்கள் காபி எஸ்டேட் வழியாக கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது டெல்லோஸ் பகுதியை சேர்ந்த வர்கிஷ் மனைவி ராதா (வயது 45), கிருஷ்ணன் மனைவி லதா (45) ஆகிய 2 பேரும் மற்ற தொழிலாளர்களுக்கு முன்னால் நடந்து சென்றனர்.

இந்த சமயத்தில் காபி தோட்டத்துக்குள் மறைந்து இருந்த காட்டு யானை ஒன்று திடீரென தொழிலாளர்களை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதைகண்ட மற்ற தொழிலாளர்கள் வந்த வழியாக திரும்பி ஓடினர். ராதாவும், லதாவும் அவர்களுடன் ஓட முயன்றனர். ஆனால் பின்தொடர்ந்து வந்த காட்டு யானை ராதா, லதாவின் முதுகில் துதிக்கையால் தாக்கியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அப்போது மற்ற தொழிலாளர்கள் காட்டு யானையை நோக்கி சத்தம் போட்டு கூச்சலிட்டனர்.

இதனால் யானை வந்த வழியாக திரும்பி சென்றது. பின்னர் பலத்த காயம் அடைந்த 2 பெண்களையும் சக தொழிலாளர்கள் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நியூகோப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ், வனச்சரகர் ராமகிருஷ்ணன், வன காப்பாளர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story