அரியலூர் மாவட்டத்தில் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம்


அரியலூர் மாவட்டத்தில் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 25 April 2018 4:00 AM IST (Updated: 25 April 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.

அரியலூர்,

தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு நேற்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. அதன்படி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், இளையபெருமாள்நல்லூர் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசுகையில், திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் உள்ளதா என்பதை கண்டறிந்து அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போன்று கிராம பொருளாதாரத்தை மேம் படுத்தும் வகையில், கிராம ஊராட்சிக்கான வளர்ச்சி திட்டம் தயாரித்தல், கிராம ஊராட்சி நிதியினை முறையாக பயன்படுத்துவதற்கான வழிவகைகளை கண்டறிதல். பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரம் வழங்குதல். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எடைகளை கண்டறிந்து அவற்றினை அங்கன்வாடி மையங்களில் எழுதிவைத்திடல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும் முதியோர் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு ஆதரவான ஊராட்சியாக மாற்றுதல், குப்பை கழிவுகள் அற்ற ஊராட்சியாக மாற்றுதல், இணையத்தள பயன்பாடு உள்ள ஊராட்சியாக மாற்றுதல், குறித்து விவாதிக்கப்பட்டது என்று கூறினார். கூட்டத்தில், திட்ட இயக்குனர் லோகேஷ்வரி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செந்துறை

செந்துறை ஒன்றியம் குழுமூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. நடேசன் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரபாவதி முன்னிலை வகித்தார். குழுமூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ரேவதி பேசுகையில், நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் தொகை பெருக்கம் பெரும் தடையாக உள்ளது. ஆகையால் 2 குழந்தைகள் பெற்ற அனைவரும் கட்டாயம் நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் கிராம வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரம், 6 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பெண்கள் மற்றும் கருவுற்ற தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்குவது குறித்தும், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செந்துறை ஆணையர் நாராயணன், துணை ஆணையர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு கிராம மக்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார்கள்.

மருத்துவ முகாம்

கிராமசபை கூட்டத்தை தொடர்ந்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முன்னதாக ஊராட்சி செயலாளர் ரவி அனைவரையும் வரவேற்றார். அதேபோல் நமங்குணம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு உதவி திட்ட அலுவலர் சந்தானகோபாலன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கிராம ஊராட்சி ஆணையர் ஜாகிர் உசேன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் செந்துறை ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. 

Next Story