தேர்தல் நடத்தும் அதிகாரி வராததால் கூட்டுறவு சங்க கதவை பூட்டி காத்திருப்பு போராட்டம்


தேர்தல் நடத்தும் அதிகாரி வராததால் கூட்டுறவு சங்க கதவை பூட்டி காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 April 2018 4:30 AM IST (Updated: 25 April 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தும் அதிகாரி வராததால் கீரமங்கலம் கூட்டுறவு சங்க கதவை பூட்டிக்கொண்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு கடந்த 9-ந் தேதி சுமார் 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களின் பரிசீலனை நேற்று முன்தினம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் நேற்று முன்தினம் காலை முதல் காத்திருந்தனர். ஆனால் அதிகாரி வரவில்லை. தொடர்ந்து நேற்று வேட்புமனுக்களை வாபஸ் பெறவும், வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடவும் அதிகாரி வருவார் என காலை முதல் வேட்புமனு தாக்கல் செய்திருந்தவர்கள் காத்திருந்தனர்.

ஆனால் மாலை வரை தேர்தல் நடத்தும் அதிகாரி வரவில்லை. இதனால் திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஞானஇளங்கோவன் தலைமையிலும், தி.மு.க நகர செயலாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் தமிழ்மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் நகர செய லாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து கூட்டுறவு சங்க மாவட்ட அதிகாரிகளிடம் சங்க செயலாளர் கணேசன் பேசிவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வருகிற 3-ந் தேதி வரை எந்த பட்டியலும் வெளியிடப்படமாட்டாது என அதிகாரிகள் கூறுவதாக கூறினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவற்றை எழுதிக் கொடுக்கும்படி கேட்டனர். சங்க செய லாளர் எழுதிக் கொடுக்க மறுத்ததால், கூட்டுறவு சங்க கதவை உள்ளே பூட்டிக் கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இரவில் வேட்பாளர் பட்டியலை ஒட்டிவிட்டு செல்ல நினைத்தால் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம். பால் வாகனத்தை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story