பிரதமரை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக பேசியவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு


பிரதமரை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக பேசியவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
x
தினத்தந்தி 24 April 2018 11:15 PM GMT (Updated: 2018-04-25T01:50:30+05:30)

பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக பேசியவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை,

சேலத்தை சேர்ந்தவர் பிரகாஷ், கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 3 கார்களை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவரிடம் அடமானம் வைத்து ரூ.2 லட்சம் வாங்கினார். அதை மீட்க வந்தபோது, கார்கள் கோவை குனியமுத்தூர் சாரமேடு பகுதியை சேர்ந்த ரபீக் என்ற முகமது ரபீக்கிடம் (வயது 50) இருப்பதாகவும், ரூ.4 லட்சம் கொடுத்தால் கார்களை மீட்கலாம் என்றும் கூறி உள்ளார்.

இதையடுத்து பிரகாஷ், ரபீக்கை தொடர்பு கொண்டு பேசும்போது, ரூ.5 லட்சம் கொடுத்தால் 3 கார்களையும் கொடுப்பேன் என்று கூறிய அவர் பிரதமர் மோடியை கொல்ல முடிவு செய்து இருப்பதாகவும் பேசி உள்ளார்.

சுமார் 8 நிமிடங்கள் கொண்ட இந்த உரையாடல் வாட்ஸ்-அப் உள்பட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ரபீக், கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையானவர். இந்த உரையாடலை கேட்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யாவிடம் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து குனியமுத்தூர் போலீசார் ரபீக் மீது இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும்படி பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையை சேர்ந்த ரபீக் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கோவை சிறையில் 3 மாதம் இருந்த அவர் பின்னர் விடுதலையானார். தற்போது அவர் பேசிய உரையாடலில் பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு உள்ளோம் என்று கூறி உள்ளார். இதன் பின்னணியில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. எனவே ரபீக் பயன்படுத்திய 2 சிம் கார்டுகள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவர் யாருக்கு எல்லாம் பேசி உள்ளார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்.

மேலும் அவர் 160 கார்களை எடுத்து உடைத்து இருப்பதாக அந்த உரையாடலில் பேசி உள்ளார். எனவே அவர் உடைத்த கார்கள் யாருடையது? எதற்காக அந்த கார்களை உடைத்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே அவரால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் புகார் செய்யலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story