கடல் சீற்றம் தணிந்ததையொட்டி 4 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்


கடல் சீற்றம் தணிந்ததையொட்டி 4 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
x
தினத்தந்தி 25 April 2018 4:30 AM IST (Updated: 25 April 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

கடல்சீற்றம் தணிந்ததையொட்டி 4 நாட்களுக்கு பிறகு குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

குளச்சல்,

கடலில் ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றத்தால் கடல் சீற்றம் ஏற்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் கடந்த 20-ந் தேதி முதல் கடல் சீற்றம் காணப்பட்டது. அழிக்கால், கொல்லங்கோடு, வள்ளவிளை போன்ற கடற்கரை கிராமங்களில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. ராட்சத அலைகளால் கடற்கரை சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடல்சீற்றம் காரணமாக கடந்த 20-ந் தேதி முதல் 4 நாட்கள் குமரி மாவட்ட மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களது கட்டுமரங்கள், வள்ளங்கள் அனைத்தும் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்களும் கரை திரும்பாமல் நடுகடலிலேயே இருந்தனர்.

தற்போது குமரி மாவட்ட கடல் பகுதியில் அலைகளின் சீற்றம் தணிந்து இயல்பாக காணப்பட்டது. இதையடுத்து 4 நாட்களுக்கு பின்பு நேற்று அதிகாலை முதல் கட்டுமரம் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த வாரம் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்த விசைப்படகுகள் ஒவ்வொன்றாக கரை திரும்ப தொடங்கின. நேற்று காலையில் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை சேர்ந்தன. இந்த விசைப்படகுகளில் கேரை, நவரை, கிளி மீன்கள், நாக்கண்டம் போன்ற மீன்கள் கிடைத்து இருந்தன. அதே நேரம் நேற்று அதிகாலையில் கடலுக்கு சென்ற கட்டுமரங்களில் சாளை போன்ற மீன்களே கிடைத்திருந்தன.

இதையடுத்து 4 நாட்களுக்கு பின்பு மீன் மார்க்கெட் செயல்பட தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக குறைவான அளவு மீன்களே கிடைத்திருந்ததால் மீன்விலை அதிகமாக இருந்தது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் தினமும் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கும். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபம், மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்து செல்வார்கள்.

கடல் சீற்றம் காரணமாக கடந்த 3 தினங்கள் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நேற்று கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து, காலை 9 மணிக்கு மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து கன்னியாகுமரி படகுதுறையில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து படகேறி சென்றனர்.

இதுபோல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, வள்ளவிளை உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கடல்சீற்றம் தணிந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். 

Next Story