முருகன் தரப்பு வக்கீல் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு


முருகன் தரப்பு வக்கீல் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 24 April 2018 10:45 PM GMT (Updated: 24 April 2018 8:44 PM GMT)

வேலூர் மத்திய ஜெயிலில், முருகனிடம் இருந்து செல்போன்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் அவரது வக்கீல் நேற்று ஆஜராகாததால் விசாரணையை இன்று (புதன்கிழமை) மாஜிஸ்திரேட்டு அலீசியா ஒத்திவைத்தார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முருகன் தங்கியிருந்த அறையில் 2 செல்போன்கள், சார்ஜர் மற்றும் சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட சிறை அதிகாரி உள்பட 7 பேரிடம் மட்டும் வக்கீல் இல்லாமல் முருகனே குறுக்கு விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து 7 சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகனிடம் மாஜிஸ்திரேட்டு அலீசியா கடந்த 19-ந் தேதி விசாரணை செய்தார்.

இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக முருகன் பலத்த போலீஸ் காவலுடன் காலை 11.30 மணியளவில் ஜெயிலில் இருந்து அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். முருகன் மன அமைதிக்காக நேற்று முன்தினம் முதல் ஜெயிலில் மவுன விரதம் இருந்து வருகிறார்.

மவுன விரதம் காரணமாக முருகன் கோர்ட்டில் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் முருகன் தரப்பில் வாதாடி வந்த வக்கீல் புகழேந்தி நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை இன்று (புதன்கிழமை) மாஜிஸ்திரேட்டு அலீசியா ஒத்திவைத்தார். பின்னர் முருகன் மீண்டும் வேலூர் மத்திய ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Next Story