கூட்டுறவு சங்க தேர்தலில் தகராறு: அ.தி.மு.க. நிர்வாகிகள் கைது


கூட்டுறவு சங்க தேர்தலில் தகராறு: அ.தி.மு.க. நிர்வாகிகள் கைது
x
தினத்தந்தி 25 April 2018 4:00 AM IST (Updated: 25 April 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே கூட்டுறவு சங்க தேர்தலின்போது தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தகராறு செய்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே வேலாயுதபுரத்தில் உள்ள காஞ்சித்தலைவர் நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் இரு அணியாக மனு கொடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதில் 22 பேர் மனு செய்து இருந்ததில் ஒரு அணியை சேர்ந்த 9 பேர் மட்டும் தேர்வு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு வந்த முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் யோக வாசுதேவன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் அலுவலர் கருப்பசாமியிடம் தகராறு செய்தனர். அவர் தாக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் நிர்வாகிகள் தேர்வு பட்டியலை கிழித்து எறிந்தார்கள்.

இது தொடர்பாக கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் சேரன் இஸ்மாயில், நகர இளைஞர் அணி செயலாளர் அன்சாரி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சிப்ஸ் முருகேசன் ஆகியோரை கைது செய்தார். யோகவாசுதேவன், முன்னாள் கவுன்சிலர்கள் தர்மராஜ், சுப்பிரமணி ஆகியோரை தேடி வருகிறார்கள். 

Next Story