நிர்மலாதேவி விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு: இந்திய கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு


நிர்மலாதேவி விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு: இந்திய கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 April 2018 11:00 PM GMT (Updated: 2018-04-25T02:21:27+05:30)

நிர்மலாதேவி விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ராஜபாளையம்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு கேரளாவில் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 22-ந் தேதி புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பிரசார வாகனம் புறப்பட்டது. மாநாடு குறித்து நாடக கலைஞர்கள் பாடல்கள் மூலமாக பிரசாரம் மேற்கொண்டனர். ராஜபாளையத்திலும் பிரசாரம் நடைபெற்றது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா நிருபர்களிடம் கூறியதாவது:-

உச்சநீதி மன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அமைதி காப்பது ஏன் என்று தெரியவில்லை. மக்களாட்சியில் நீதித்துறை உயர்வானதா அரசியலமைப்பு உயர்வானதா என்ற கேள்வி வருகிறது. எங்களை பொருத்தவரையில் அரசியலமைப்பு தான் உயர்வானது. சட்டம் அதற்குள் அடங்கும். நீதித்துறையில் ஊழல் இருப்பதால் மத்திய அரசு ஊழலை பாதுகாக்க சட்டத்தை மாற்ற நினைக்கிறது. இவ்வாறு கூறினார்.

அவருடன் வந்திருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் கூறியதாவது:-

அருப்புகோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது. பல்கலைக்கழக உயர் அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான பணம் கைமாறியுள்ளது. இந்த விவகாரத்தில் கவர்னர் தாமாக முன் வந்து விசாரணை நடத்துவோம் எனக் கூறியிருப்பது அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தான் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் கட்சியினரிடையே எழுந்துள்ளது. இவ்வாறு கூறினார். அப்போது கட்சியின் நகர செயலாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story