விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 April 2018 3:30 AM IST (Updated: 25 April 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையங்களில் 24-ந் தேதி (நேற்று) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோடு, கோபிசெட்டிபாளையம் ஆகிய 2 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் உயர்நிலை பள்ளிக்கூட வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ-கிராப் மாவட்ட தொடர்பாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட தொடர்பாளர் சரவணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் சின்னதுரை, பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாவட்ட தலைவர் எம்.ரவி, தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட இணைச்செயலாளர் தானதயாளன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:-

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

7-வது ஊதியக்குழு பரிந்துரையின் படி 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்.

அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும்.

பள்ளிக்கல்வி துறையில் இயக்குனரகங்களை இணைப்பது, இணை இயக்குனரகங்களை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் ஆசிரியர், அலுவலர் பணியிடங்களை குறைக்க அமைக்கப்பட்டு உள்ள ஆதிசேசய்யா குழுவை உடனடியாக கலைக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரிய-ஆசிரியைகள் கருப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட இணைச்செயலாளர் பாலாஜி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் நேரு, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட செயலாளர் முரளிதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்தபிறகு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வின் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஆசிரிய-ஆசிரியைகள் ஈடுபட்டனர்.

இதேபோல் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோபியில் விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் ஈரோடு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. அதன்பின்னர் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு சென்று பணியில் ஈடுபட்டார்கள்.

Next Story