தேனி அருகே பின்னத்தேவன்பட்டியில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க இடம் தேர்வு


தேனி அருகே பின்னத்தேவன்பட்டியில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க இடம் தேர்வு
x
தினத்தந்தி 24 April 2018 10:00 PM GMT (Updated: 2018-04-25T02:38:27+05:30)

தேனி அருகே பின்னத்தேவன்பட்டியில், கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.

தேனி,


மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளியை, தேனி மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இந்த பள்ளி அமைக்க, தேனி பகுதியில் இடம் தேர்வு செய்யும் பணி சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்காக தப்புக்குண்டு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர், அந்த இடம் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து தேனி நகருக்கு அருகில் இடம் பார்க்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அந்த வகையில் தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டி வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட பின்னத்தேவன்பட்டி பகுதியிலும், தேனி புறவழிச்சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகிலும் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடங்கள் உள்ளன.

இந்த இடங்களை நேரில் பார்வையிடுவதற்காக, மதுரையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் ஜெரால்டு நேற்று தேனிக்கு வந்தார். அவர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் புறவழிச்சாலையில் உள்ள சுமார் 4½ ஏக்கர் நிலத்தை பார்வையிட்டனர். அந்த இடம் போதுமானதாக இல்லை என்று பள்ளி முதல்வர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பின்னத்தேவன்பட்டியில் உள்ள இடத்தை அவர்கள் பார்வையிட்டனர். அங்கு சுமார் 10 ஏக்கர் அளவில் பள்ளிக்காக இடம் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இடம் திருப்திகரமாக இருப்பதாக கூறியதுடன், அதற்கான சாலை வசதிகள் குறித்து ஜெரால்டு கேட்டறிந்தார்.

பள்ளி கட்டுமான பணிகள் தொடங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், அந்த நிதியாண்டு முதலே தற்காலிக இடத்தில் பள்ளி வகுப்புகள் செயல்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தற்காலிக வகுப்பறைக்கு இடம் தேர்வு செய்யும் பணியும் நடந்தது.

இதற்காக பின்னத்தேவன்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான கட்டிடத்தையும், லட்சுமிபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தையும் பார்வையிட்டனர். 15 வகுப்பறைகள் வரை தேவைப்படும் என்பதால், லட்சுமிபுரம் பள்ளியில் போதிய இடவசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், தனியார் கல்லூரியில் தற்காலிகமாக பள்ளி வகுப்புகளை தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறலாம் என ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆய்வில் தேனி தாசில்தார் சத்தியபாமா, பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது பின்னத்தேவன்பட்டியில் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

கேந்திர வித்யாலயா பள்ளிகளின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு இடத்தை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு இடத்தை உறுதிபடுத்திவிட்டால், உடனடியாக நிதி ஒதுக்கீடு பெற்று கட்டுமான பணிகள் தொடங்கப்படும். விரைவில், உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்வார்கள்’ என்றனர்.

Next Story