திருவண்ணாமலைக்கு ரெயில்கள் வரும் நேரம் குறித்த அட்டவணை வெளியீடு


திருவண்ணாமலைக்கு ரெயில்கள் வரும் நேரம் குறித்த அட்டவணை வெளியீடு
x
தினத்தந்தி 25 April 2018 3:45 AM IST (Updated: 25 April 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

சித்ரா பவுர்ணமியன்று கிரிவலம் செல்லும் வெளியூர் பக்தர்கள் வசதிக்காக திருவண்ணாமலைக்கு ரெயில்கள் வரும் நேரம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவும், சித்ரா பவுர்ணமி விழாவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த நாளில் கிரிவலம் செல்வதை சிறப்பு மிக்கதாக பக்தர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மறுநாள் 30-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6.45 மணி வரை உள்ளது. இதனையொட்டி அன்று பல்வேறு ஊர்களிலிருந்து கிரிவலம் செல்வதற்காக ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிய உள்ளனர். அவர்களது வசதிக்காக திருவண்ணாமலைக்கு ரெயில்கள் வந்து செல்லும் நேரம் குறித்த அட்டவணை தெற்கு ரெயில்வே மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தாதர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் வருகிற 28-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 7.50 மணிக்கு கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு திருவண்ணாமலையை வந்தடைகிறது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு, காலை 7.15 மணிக்கு புதுச்சேரியை சென்று அடைகிறது. இதே ரெயில் மறுமார்க்கத்தில் அன்று இரவு 8.50 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருவண்ணாமலைக்கு வரும். பின்னர் புறப்படும் ரெயில் 30-ந் தேதி காலை 6 மணிக்கு யஷ்வந்த்பூரை சென்றடைகிறது.

ராமேசுவரத்தில் இருந்து 28-ந் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் ரெயில் மதுரை, மயிலாடுதுறை வழியாக 29-ந் தேதி அதிகாலை 4.58 மணிக்கு திருவண்ணாமலையை வந்தடைகிறது. பின்னர் இங்கிருந்து புறப்படும் ரெயில் காலை 10 மணிக்கு திருப்பதியை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இதே ரெயில் திருப்பதியில் இருந்து பகல் 1 மணிக்கும் புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடைகிறது. பின்னர் இந்த ரெயில் 30-ந் தேதி காலை 7.35 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடைகிறது.

பாமணி விரைவு ரெயில் மன்னார்குடியில் இருந்து 29-ந் தேதி காலை 5.30 மணிக்கு புறப்பட்டு காலை 11.18 மணிக்கு திருவண்ணாமலை வந்தடைகிறது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு மாலை 4.35 மணிக்கு திருப்பதியை சென்றடைகிறது.

புதுச்சேரி- திருப்பதி விரைவு ரெயில் 29-ந் தேதி காலை 8.35 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு காலை 10.30 மணிக்கு திருவண்ணாமலை வந்தடைந்து பிற்பகல் 3.20 மணிக்கு திருப்பதி சென்றடைகிறது.

Next Story