விழுப்புரத்தில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம், மறியலில் ஈடுபட முயன்ற 20 பேர் கைது


விழுப்புரத்தில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம், மறியலில் ஈடுபட முயன்ற 20 பேர் கைது
x
தினத்தந்தி 25 April 2018 3:45 AM IST (Updated: 25 April 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட முயன்ற 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழக தமிழாசிரியர் கழகம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 20 சங்கங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களின் கோரிக்கை நிறைவேறாததால் நேற்று தமிழகம் முழுவதும் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து அந்தந்த மையங்களின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் விழுப்புரத்தில் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டம் செய்தனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொருளாளர் கோவிந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய அவர்கள், அந்த பகுதியில் மறியல் செய்ய முயன்றனர்.

உடனே விழுப்புரம் நகர போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 20 ஆசிரியர்களை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story