சிதம்பரம், நெய்வேலியில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்


சிதம்பரம், நெய்வேலியில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 April 2018 10:15 PM GMT (Updated: 24 April 2018 9:34 PM GMT)

சிதம்பரம், நெய்வேலியில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

சிதம்பரம்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் 21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்து வரும் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி முன்பு நடந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். அனைத்து ஆசிரியர் நலச்சங்க மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

போராட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட 110 ஆசிரியர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக இது பற்றி நிர்வாகிகள் கூறுகையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்போம் என்றனர்.

இதேபோல் நெய்வேலி மந்தாரக்குப்பம் என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த ஆசிரியர்கள் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்தாமல் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு தமிழக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார். இதில் ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 

Next Story