மைசூருவில் பயங்கரம் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை சட்டம் இயற்றிய 48 மணி நேரத்தில் கொடூர சம்பவம்
மைசூருவில் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டாள். சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு தூக்குதண்டனை சட்டம் இயற்றிய 48 மணி நேரத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மைசூரு,
மைசூருவில் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டாள். சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு தூக்குதண்டனை சட்டம் இயற்றிய 48 மணி நேரத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிறுமி கற்பழிப்பு
மைசூருவை சேர்ந்தவள் 9 வயது சிறுமி. இவள் அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து முடித்திருந்தாள். தற்போது பள்ளி கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால், அவள் தினமும் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருப்பாள். இந்த நிலையில் நேற்று முன்தினமும் சிறுமி தனது வீட்டின் அருகே வழக்கம்போல விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் சிறுமியிடம் சாக்லெட் வாங்கி கொடுப்பதாக கூறி மறைவான பகுதிக்கு கடத்தி சென்று வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி இதுபற்றி யாரிடமும் கூறவில்லை என தெரிகிறது.
சுயநினைவை இழந்தாள்
இந்த நிலையில், நேற்று காலை சிறுமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாள். திடீரென்று அவள் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவளுடைய பெற்றோர், அவளை எழுப்ப முயன்றனர். அப்போது தான் அவள் சுயநினைவை இழந்தது தெரியவந்தது. மேலும் அவளுக்கு ரத்தகசிவும் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவளுடைய பெற்றோர், சிறுமியை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, சிறுமி வலுக்கட்டாயமாக கற்பழிக்கப்பட்டதாகவும் செய்யப்பட்டிருப்பதாகவும், உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ந்து போயினர். மேலும் தங்கள் மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததால், உடனடியாக வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்று டாக்டர்கள் அவர்களிடம் கூறியுள்ளனர்.
சாவு; தனிப்படை அமைப்பு
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அவளை தூக்கிக் கொண்டு மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். ஆனாலும் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு நொறுங்கி போன அவளுடைய பெற்றோர், சிறுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் மைசூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் என்.ஆர்.மொகல்லா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கற்பழித்து கொன்ற மர்மநபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபரை கண்டுபிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
48 மணி நேரத்தில்...
காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் ஏராளமான போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் நபர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார்.
இந்த சட்டம் இயற்றப்பட்டு 48 மணி நேரத்தில் அதாவது 2 நாட்களுக்குள் மைசூருவில் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சட்டம் இயற்றிய பிறகு நடந்த முதல் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story