பெட்ரோல் மீதான வரியை குறைக்க வேண்டும் முதல்-மந்திரிக்கு, காங்கிரஸ் வலியுறுத்தல்


பெட்ரோல் மீதான வரியை குறைக்க வேண்டும் முதல்-மந்திரிக்கு, காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 April 2018 10:30 PM GMT (Updated: 2018-04-25T03:53:07+05:30)

பெட்ரோல் மீதான வரியை குறைக்கவேண்டும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

பெட்ரோல் மீதான வரியை குறைக்கவேண்டும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

வரியை குறைக்கவேண்டும்

மராட்டியத்தில் பிற மாநிலங்களை காட்டிலும் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோலிய பொருட்கள் மீது மாநில அரசு விதித்துள்ள அதிகபட்ச வரியே இதற்கு காரணமாகும். இந்தநிலையில் பெட்ரோலிய பொருட்கள் மீது மாநில அரசு விதித்துள்ள வரியை குறைக்கவேண்டும் என முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கச்சா எண்ணெய் விலை சரிவு

தற்போது மராட்டியத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. 2014-ம் ஆண்டு நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தபோது, ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 108 டாலராக இருந்தது. பின்னர் இது 25 முதல் 27 டாலராக குறைந்தது. ஆனால் அப்போதும் கூட நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக்கொண்டு தான் இருந்தது.

தற்போது கூட ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 70 டாலராக மட்டுமே உள்ளது. ஆனால் 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது.

கர்நாடகாவில் விலை குறைவு

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீது விதித்துள்ள அதிகப்படியான வரியே இந்த விலை உயர்வுக்கு காரணம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 147 டாலர் வரை இருந்தது. ஆனால் அப்போது கூட அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிகளவு உயர்த்தாமல் இருந்தது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் மராட்டியத்தை விட பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9-ம், டீசல் ரூ.3.50-ம் குறைவாக இருக்கிறது.

எனவே மாநில அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story