தேர்தலை முறையாக நடத்த கோரி வடகரை கூட்டுறவு கடன் சங்கத்தை அரசியல் கட்சியினர் முற்றுகை


தேர்தலை முறையாக நடத்த கோரி வடகரை கூட்டுறவு கடன் சங்கத்தை அரசியல் கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 1 May 2018 3:30 AM IST (Updated: 1 May 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலை முறையாக நடத்த கோரி வடகரை கூட்டுறவு கடன் சங்கத்தை அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே உள்ள வடகரை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் இயக்குனர்களுக்கான தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க.வினருக்கு சாதகமாக தேர்தல் அதிகாரிகள் செயல்படுவதாக தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் வடகரை கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தேர்தலை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story