தொடரும் திருட்டு சம்பவங்கள்: புதுச்சேரி போலீசாருக்கு டி.ஜி.பி. அதிரடி உத்தரவு


தொடரும் திருட்டு சம்பவங்கள்: புதுச்சேரி போலீசாருக்கு டி.ஜி.பி. அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 1 May 2018 4:49 AM IST (Updated: 1 May 2018 4:49 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் தொடரும் திருட்டு சம்பவங்கள் காரணமாக போலீசாருக்கு டி.ஜி.பி. அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி,

அமைதிப்பூங்காவாக இருந்த புதுச்சேரியில் கடந்த 15 நாட்களில் 8 திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. மிக அதிக மதிப்புடைய பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

தற்போது கோடை விடுமுறை தொடங்கி உள்ள நிலையில் பெரும்பாலானவர்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளனர். தற்போது நடந்து வரும் திருட்டு சம்பவங்கள் அவர்களை இப்போது அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தாங்கள் வெளியூர் சென்றால் நமது உடமைகள் பாதுகாப்பாக இருக்குமா? என்ற அச்சம் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் காவல்துறை மீது கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. தொடர்ந்து நடைபெறும் இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் கிடைக்காததால் காவல்துறையினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்தநிலையில் போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் போலீசாருக்கு சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவர் தனது உத்தரவில், போலீசாரால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட அனைத்து திருடர்களையும் தங்களது கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருக்க வேண்டும். ரோந்து செல்லும் அதிகாரிகள் அவர்கள் குறித்த பட்டியலை ரோந்து புத்தகத்தில் பதிந்து வைத்து கண்காணிக்க வேண்டும்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களின் பட்டியலை நிலைய அதிகாரிகள் பெற்றுக்கொண்டு முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ரோந்து செல்லும் அதிகாரிகள், போலீசார் முழுமையான ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும்.

வெளியூர் செல்லும் மக்கள் குறித்த தகவலை பெற்று அதன் அடிப்படையில் அப்பகுதியில் ரோந்துகளை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்களும் வெளியூர் செல்லும் தகவலை அக்கம்பக்கத்தினரிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Next Story