பர்கூர் திரவுபதியம்மன் கோவில் விழா: தெருக்கூத்து கலைஞர்கள் நிகழ்ச்சி


பர்கூர் திரவுபதியம்மன் கோவில் விழா: தெருக்கூத்து கலைஞர்கள்  நிகழ்ச்சி
x
தினத்தந்தி 2 May 2018 4:30 AM IST (Updated: 2 May 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் திரவுபதியம்மன் கோவில் விழாவையொட்டி தெருக்கூத்து கலைஞர்கள் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை தத்ரூபமாக நடித்து காட்டினார்கள். இதை திரளான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

பர்கூர்,

இன்று நாகரிக வளர்ச்சியால் பண்டைய கால நாடக கலைகள் அழிந்து வருகின்றன. இருப்பினும் ஆங்காங்கே ஒரு சில கலைஞர்கள் மட்டும் அந்த கலையை உயிர்ப்பித்து வருகிறார்கள்.இதில் தெருக்கூத்து கலையை இன்னும் உயிர்ப்பித்து கொண்டு இருக்கிறார்கள் பர்கூர் பொதுமக்கள். தங்கள் ஊரின் திரவுபதியம்மன் கோவில் விழாக்களின் போது அந்த தெருக்கூத்து கலை நிகழ்ச்சியை காலம், காலமாக நடத்தி வருகிறார்கள்.

பர்கூர் பஸ் நிலையத்தில் திரவுபதியம்மனுக்கு கோவில் உள்ளது. இந்த கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசைக்கு பின்பு பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வழிபடுவார்கள். அதை தொடர்ந்து சித்திரை மாதத்தில் மகா பாரத சொற்பொழிவும், இரவு நேரத்தில் தெருக்கூத்து நிகழ்ச்சியையும் நடத்துகிறார்கள். அது போல் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி திரவுபதியம்மன் கோவிலில் மகா பாரத சொற்பொழிவு நிகழ்ச்சியை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. அன்று முதல் காஞ்சீபுரம் சு.முத்துகணேசன் மகாபாரத சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.

கடந்த 24-ந்தேதி முதல் பர்கூரை அடுத்த கொண்டப்ப நாயனப்பள்ளி ஓம்ஸ்ரீ ஆதிபராசக்தி நாடக குழு ஆசிரியரும், தமிழக அரசின் கலைவளர்மணி விருது பெற்றவருமான இளங்கோவன் தனது குழுவினர் மூலம் தெருக்கூத்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.

அதனை தொடர்ந்து நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக பர்கூரில் உள்ள 24 மனை தெலுங்கு செட்டியார் திருமண மண்டப வளாகத்தில் 30 அடி நீளம் கொண்ட பிரமாண்ட துரியோதனன் மணற்சிலை சயனகோலத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு இரவு கோவிலில் திரவுபதியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பிறகு பாரத போரை நினைவுப்படுத்தும் விதமாக கூந்தலை விரித்த கோலத்துடன் திரவுபதி வேடத்தில் இருந்த பெண் கலைஞரும், பீமன், துரியோதனன், கிருஷ்ணன், நகுலன், சகாதேவன் ஆகியோரின் வேடமிட்ட தெருக்கூத்து கலைஞர்களும் கோவிலில் இருந்து ஊர்வலமாக திருமண மண்டபத்திற்கு சென்றனர். அவர்கள் பின்னால் ஊர்பொதுமக்களும் சென்றனர்.

திருமண மண்டப வளாகத்தில் மணற்சிலை அருகே துரியோதனனுக்கும், பீமனுக்கும் மோதல் ஏற்படும் காட்சி தத்ரூபமாக நடித்து காண்பிக்கப்பட்டது. துரியோதனனின் வலது தொடையை பீமன் அடித்து அவனது உயிரை பறிக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.அதன்பிறகு திரவுபதி வேடத்தில் இருந்த பெண் கலைஞர் தனது கூந்தலை முடித்து சபதத்தை நிறைவேற்றி திருப்தி அடைந்தவர் போல் காணப்பட்டார். தெருக்கூத்து கலைஞர்கள் அன்றைய கால காட்சிகளை அப்படியே நடித்து அசத்தினர். இன்றைய நாகரிக காலத்திலும் இந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு துரியோதனன் மணற்சிலை மீது பல்லக்கில் அமர்ந்திருந்த திரவுபதியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அம்மனை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை பர்கூர் ஊர் செட்டியார் ரங்கப்பன், வக்கீல் அசோகன் உள்பட ஊர்பொதுமக்கள் செய்தனர்.

Next Story