குன்னூர் ஏல மையத்தில் ரூ.2.5 கோடி மதிப்பிலான தேயிலைத்தூள் தேக்கம் - சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் தகவல்


குன்னூர் ஏல மையத்தில் ரூ.2.5 கோடி மதிப்பிலான தேயிலைத்தூள் தேக்கம் - சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் தகவல்
x
தினத்தந்தி 2 May 2018 4:45 AM IST (Updated: 2 May 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

வட இந்திய வர்த்தகர்களின் பங்களிப்பு குறைந்ததால் குன்னூர் ஏல மையத்தில் ரூ.2.5 கோடி மதிப்பிலான தேயிலைத்தூள் தேக்கமடைந்துள்ளது.

குன்னூர்,

வட இந்திய வர்த்தகர்களின் பங்களிப்பு குறைந்ததால் குன்னூர் ஏல மையத்தில் ரூ.2½ கோடி மதிப்பிலான தேயிலைத்தூள் தேக்கம் அடைந்து உள்ளதாக சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் பி.எஸ்.சுந்தர் தெரிவித்து உள்ளார்.

குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பின் சார்பில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலை ஏலம் நடத்தப்படுகிறது. இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுத்து வருகின்றனர். விற்பனை எண் 17-க்கான ஏலத்தில் அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் 4 ரூபாய் விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இந்த விலை வீழ்ச்சி சிறு தேயிலை விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் பி.எஸ்.சுந்தர் கூறியதாவது:-

குன்னூர் ஏல மையத்தில் கடந்த மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஏலத்தில் சராசரி விலை கிலோவிற்கு 91 ரூபாய் 97 பைசாவாக இருந்தது. ஆனால் இந்த விலை இதற்கு முந்தைய வாரத்தில் 95 ரூபாய் 55 பைசாவாக இருந்தது. வட இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாதங்களில் தேயிலைத்தூள் உற்பத்தி குறைந்து காணப்பட்டது. இதனால் வட இந்திய வர்த்தகர்கள் குன்னூர் ஏல மையம் மூலம் தேயிலைத்தூளை கொள்முதல் செய்து வந்தனர். இதன் காரணமாக ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை தேயிலைத்தூள் விலையில் ஏற்றம் இருந்தது.

ஆனால் ஏப்ரல் மாதத்தில் வட இந்திய தேயிலையின் உற்பத்திக்கு சாதகமான கால நிலை இருந்ததால் தேயிலை உற்பத்தி அதிகரித்தது. இதனால் சந்தைக்கு வட இந்திய தேயிலைத்தூள் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக வட இந்திய வர்த்தகர்கள் அங்குள்ள ஏல மையங்களில் தேயிலைத்தூளை கொள்முதல் செய்ய தொடங்கினர்.

தென்னிந்திய தேயிலைத்தூளை பொறுத்தவரை குறைந்த விலைக்கு கிடைக்கும் தேயிலைத்தூளை மட்டுமே வாங்க வட இந்திய வர்த்தகர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இதன் காரணமாக நீலகிரி தேயிலைத்தூள் தேக்கம் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் உற்பத்தியாளர்கள் விலையை குறைக்க முன் வந்தனர். இதனால் அவர்கள் முந்தைய ஏலத்தை விட இந்த ஏலத்தில் ஒரு கிலோவிற்கு 4 ரூபாய் விலை குறைத்து விற்பனை செய்தனர். இருப்பினும் வட இந்திய வர்த்தகர்களின் பங்களிப்பு குறைந்ததால் ஏலத்திற்கு வந்த தேயிலைத்தூளில் 2 லட்சத்து 77 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் தேக்கமடைந்தது. இதன் மதிப்பு ரூ.2 கோடியே 55 லட்சம் ஆகும். சராசரி விலையான 91 ரூபாய் 97 பைசா என்பது கடந்த 13 வாரங்களில் மிக குறைந்த விலையாகும் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story