மே தினத்தையொட்டி அனைத்து தொழிலாளர் முன்னேற்ற நலச்சங்கத்தினர் ஊர்வலம்

நாமக்கல்லில் நேற்று அனைத்து தொழிலாளர் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் நடத்தப்பட்டது.
நாமக்கல்,
நீலகிரி மண்டல அனைத்து தொழிலாளர் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் நேற்று நாமக்கல்லில் மே தின ஊர்வலம் மற்றும் சிறப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயந்தகுமார், பொருளாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாமக்கல் வட்ட பாடிபில்டர்ஸ் சங்க தலைவர் புகழேந்திரன், மெக்கானிக் அசோசியேசன் தலைவர் குமரவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் அவை தலைவர் ஆறுமுகம், துணை தலைவர் காமராஜ், துணை பொருளாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து பொதுக்கூட்டம் நடந்த திருமண மண்டபம் வரை ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் லாரி பட்டறை தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடந்தது. இந்த விழாவுக்கு கிளை தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், சுந்தரராஜன், முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நாமக்கல் ரெங்கர் சன்னதியில் மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் மே தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு சி.ஐ.டி.யு. கிளை தலைவர் காளியண்ணன் தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் துணை தலைவர் யோகமணி, பிரதேச குழு செயலாளர் ஜெயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story