வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவிற்காக கடந்த மாதம் 27-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால், அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வந்தது.
அதன்பின்னர் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதையடுத்து சித்திரை திருவிழாவுக்கு சென்றடையும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் பக்தர்கள் வெள்ளத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். திருவிழா சிறப்பாக நடந்ததை தொடர்ந்து, வைகை அணையில் இருந்து நேற்று முன்தினம் காலையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
மதுரை சித்திரை திருவிழாவுக்காக தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 33.79 அடியாக குறைந்து உள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வைகை அணையில் இருப்பு உள்ள தண்ணீரை மதுரை மாநகரம் மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட பகுதிகளின் குடிநீர் தேவைக்கு மட்டும் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 33.79 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், அணையில் இருந்து மதுரை மாநகரம் மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக வினாடிக்கு 48 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 541 மில்லியன் கனஅடியாக இருந்தது.
Related Tags :
Next Story