காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்கமாட்டோம் - வைத்திலிங்கம் எம்.பி.


காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்கமாட்டோம் - வைத்திலிங்கம் எம்.பி.
x
தினத்தந்தி 2 May 2018 5:00 AM IST (Updated: 2 May 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையைவிட்டு கொடுக்கமாட்டோம் என அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை ஆப்ரகாம்பண்டிதர் சாலையில் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதற்கு தெற்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, மாவட்ட இணைச் செயலாளர் சாவித்திரிகோபால், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க இணைச் செயலாளர் இளங்கோவன் வரவேற்றார்.

இதில், தலைமை கழக பேச்சாளர் மதுரை இளவரசன், பரசுராமன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராஜன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-

தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த அ.தி.மு.க. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 14 தொழிற்சங்கங்களுக்கு ஜெயலலிதா அங்கீகாரம் அளித்ததோடு, நலிந்த தொழிலாளர்களுக்கு நிதிஉதவி வழங்கினார். அவர் வழியில் செயல்படும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், மின்சாரத்துறை தொழிலாளர்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்கி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி நல்லாட்சி நடத்தி வருகிறது.

ஜெயலலிதா கோப்புகள் தேங்காத வகையில் எந்த வேகத்தில் செயல்பட்டாரோ, அதே வேகத்தில் கோப்புகள் தேங்காத வகையில் தமிழகஅரசு செயல்பட்டு வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இரட்டை இலையையும், அ.தி.மு.க.வையும் எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியவில்லை. எனக்கு பின்னரும் 100 ஆண்டு காலம் அ.தி.மு.க. நிலைத்து இருக்கும் என்று ஜெயலலிதா தெரிவித்தார். அதன்படி மக்களுக்காக அ.தி.மு.க. பாடுபடும். தொடர்ந்து ஆட்சியிலும் நீடிக்கும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மத்தியஅரசுடன் சுமுகமாக இருந்தும், கோர்ட்டுகள் மூலமாகவும் நமது உரிமைகளை மீட்டெடுத்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அ.தி.மு.க. அரசு தவறிவிட்டது என்றும், அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா? செய்ய வேண்டும் என்றும் கூறி மு.க.ஸ்டாலின் தனது தோழமை கட்சியினருடன் நடைபயணம் மேற்கொண்டார். ராஜினாமா செய்தால் காவிரி தண்ணீர் கிடைத்துவிடுமா?. நாளைக்கே காவிரி தண்ணீர் கிடைத்துவிடும் என்று ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா?.

காவிரி பிரச்சினையை அரசியலாக்கி, இன்று வரை இப்பிரச்சினை தீராததற்கு மூல காரணமே தி.மு.க. தலைவர் கருணாநிதி தான். காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்கமாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செயலாளர் ராஜ மாணிக்கம், காவிரி சிறப்பு அங்காடி தலைவர் பண்டரிநாதன், மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் துரைசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அண்ணா தொழிற்சங்க அவைத் தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.

Next Story