விழுப்புரம் அருகே கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியல்
விழுப்புரம் அருகே கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊராட்சி கணக்குகளை சரிவர காட்டவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.
விழுப்புரம்
விழுப்புரம் அருகே அரியலூர் திருக்கை ஊராட்சியில் நேற்று காலை மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், கடந்த ஒரு வருடத்திற்கான வரவு, செலவை தாக்கல் செய்யும்படி பொதுமக்கள் கேட்டனர். அதற்கு ஊராட்சி நிர்வாகத்தினர், சரிவர கணக்கு காட்டவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பகல் 12 மணியளவில் திடீரென கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு செய்துவிட்டு அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஊராட்சியில் பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதனால் சரிவர கணக்கு காட்டுவதில்லை எனவும் குற்றம்சாட்டினர். இந்த மறியல் காரணமாக விழுப்புரம்- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் கெடார் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜீவராஜமணிகண்டன் மற்றும் போலீசாரும், காணை வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதின்பேரில் அவர்கள் அனைவரும் 12.30 மணிக்கு மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது
Related Tags :
Next Story