கோவில் திருவிழாவில் போலீஸ்காரர்களை தாக்கிய 9 பேர் கைது
ஆண்டிப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர்களை தாக்கியதாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே மறவபட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் நேற்று முன்தினம் இரவு கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது. ஊர்மக்கள் பெரும்பாலானோர் நிகழ்ச்சியை பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் உள்ள ஒரு சிலருக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர்கள் ராமச்சந்திரன், ராஜவேல் ஆகியோரை ஒரு கும்பல் தாக்கியது. அப்போது விழா பந்தலில் கட்டப்பட்டு இருந்த டியூப்லைட்களை எடுத்து போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு குலாம் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
காயம் அடைந்த போலீஸ்காரர்களை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலீஸ்காரர்களை தாக்கியதாக அழகுபிரபு (வயது 23), விஜயகுமார் (19), அழகம்மாள் (45), சதீஸ் (21), மூர்த்தி (23) உள்பட 9 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story