அம்பேத்கர் சிலை உடைப்பு கிராம மக்கள் சாலை மறியல்


அம்பேத்கர் சிலை உடைப்பு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 May 2018 11:00 PM GMT (Updated: 2 May 2018 9:28 PM GMT)

திருவோணம் அருகே நள்ளிரவில் அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. சிலையை உடைத்து சேதப்படுத்திய நபர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள வெங்கரை கிராமத்தில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் அம்பேத்கர் சிலையின் தலை பகுதியை உடைத்து எடுத்து அதனை அருகிலுள்ள ஒரு ஏரியின் அருகே சாலையில் வீசி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பேத்கர் மக்கள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் அம்பேத்கர் சிலையை உடைத்து சேதப் படுத்திய நபர்களை கைது செய்யக்கோரி நேற்று காலை வா.கொல்லைக்காட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) செங்கமலக்கண்ணன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இது தொடர்பாக விரைவாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி யளித்தார்.

இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் பட்டுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சிவமுருகேசன் அளித்த புகாரின் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கரை கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலரை பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story