கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவிலில் சித்திரை திருவிழா


கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவிலில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 3 May 2018 4:00 AM IST (Updated: 3 May 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவில் பக்தர்கள் மதுக்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து வழிபாடு நடத்தினர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் சித்திரை திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து மண்டகப்பட்டி தாரர்கள் சார்பில் கருப்பர், வண்ணாத்தாள், கொம்புக்காரன் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மேலும் கடந்த 25-ந்தேதி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில் நவதானியங்களால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை தலையில் சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு விஷேச பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மது எடுப்பு விழா நடந்தது. மதுக்குடம் என்பது மண்பானைகளில் தென்னைமரப் பாளைகளை வைத்து அலங்கரித்து பூஜை செய்து வைக்கப்பட்ட குடம் ஆகும். நேற்று அதிகாலை தட்டாவூரணி, குளக்காரன்தெரு, தென்னகர், அக்ர ஹாரம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் தாரை தப்பட்டை முழங்க மதுக்குடங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

விழாவையொட்டி கறம்பக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். மாலையில் கிடா வெட்டு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

மேலும் கறம்பக்குடி முத்துகருப்பையா கோவிலில் வருகிற 9-ந்தேதி திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று முளைப்பாரி பூஜை நடந்தது. இதில் மண்டகபடி தாரர்கள் சார்பில் நவதானியங்களால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் குளத்தில் விடப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது. 
1 More update

Next Story