திண்டுக்கல்லில், அனுமதியின்றி மண் அள்ளி வந்த 5 லாரிகள் பறிமுதல்
திண்டுக்கல்லில் அனுமதியின்றி லாரிகளில் மண் அள்ளி வந்த 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பொருட்டு சுமார் 1,800 குளங்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளித்து கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகள் தங்கள் பகுதிக்குட்பட்ட தாசில்தாரிடம் முறையான அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட குளங்களில் மண் அள்ளிக்கொள்ளலாம். இந்த மண்ணை விவசாய தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் பலர் செங்கல் சூளை உள்ளிட்டவற்றுக்கு மண்ணை பயன்படுத்துவதாக கலெக்டருக்கு புகார் வந்தது.
இதையடுத்து மண் திருட்டை தடுக்க அந்தந்த பகுதி தாசில்தார்கள் தலைமையில் குழு அமைத்தும், அதனை ஆர்.டி.ஓ. கண்காணிக்க வேண்டும் என்றும் கலெக்டர் உத்தரவிட்டார். இதேபோல ரோந்து செல்லும் போலீசாரும் மண் திருட்டை கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று திண்டுக்கல் அருகே உள்ள வாழைக்காய்பட்டி பிரிவில் தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில் அந்த வழியாக மண் அள்ளிவந்த 3 லாரிகளை மறித்து சோதனை நடத்தினர். அப்போது அவற்றில் குளங்களில் இருந்து மண் அள்ளி வந்தது தெரியவந்தது. ஆனால் அந்த லாரிகளில் முறையான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து தாலுகா போலீஸ் நிலையத்தில் நிறுத்தினர்.
இதேபோல திண்டுக்கல் மேற்கு தாசில்தார் மிருணாளினி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மறித்து சோதனை செய்தபோது, உரிய அனுமதியின்றி மண் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story