சொட்டு நீர் பாசன கருவிகள் வாங்க 100 சதவீத மானியம்
சொட்டு நீர் பாசன கருவிகள் வாங்குவதற்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இதனை சிறு, குறு விவசாயிகள் முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் ராமன் அறிவுறுத்தினார்.
வேலூர்,
வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட வேளாண்மைத்துறை மற்றும் இதர துறைகள் சார்பில் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மத்திய அரசின் கால்நடைத்துறை செயலாளர் தீபக் சித்திக், நீர் வடிபகுதி துணை இயக்குனர் வாசுதேவ ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சுப்புலட்சுமி வரவேற்றார்.
விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை கூட்டம் ஏப்ரல் 14-ந் தேதி முதல் மே 5-ந் தேதி வரை நடக்கிறது. இதில் விவசாயிகள் நலன் காக்கவும், அவர்களது வருமானத்தை இரு மடங்காக அதிகரிக்கவும், அரசின் விவசாய திட்டங்கள் குறித்த பயிற்சி, விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி போன்றவை நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில், தோட்டக்கலை துறை, வேளாண்துறை, பொறியியல் துறை, வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் விற்பனை குழு அதிகாரிகள் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் வறண்ட பகுதிகளில் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, விவசாயிகள் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன கருவிகள் வாங்க 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இதனை அவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் மண்வள அட்டைகளை பெற்று, அதற்கு ஏற்றபடி விவசாயம் செய்ய வேண்டும்.
பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து அதன் பயனை முழுமையாக பெற வேண்டும். அரசு சார்பில் உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 51 ஆயிரம் விவசாயிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது குறித்து மற்ற விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முன்னதாக மத்திய அரசின் கால்நடைத்துறை செயலாளர் தீபக் சித்திக், கலெக்டர் ராமன் ஆகியோர் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் வழங்கினர். தெருக்கூத்து கலைஞர்கள் மூலமாக விவசாயிகளுக்கு வேளாண்மை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பொண்ணு, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பிரசாத், முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரன், வேளாண்மைதுறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி, விற்பனைக்குழு செயலாளர் சங்கரசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story