குழந்தைகளுக்கு நோய் பரவும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையம்


குழந்தைகளுக்கு நோய் பரவும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையம்
x
தினத்தந்தி 3 May 2018 4:03 AM IST (Updated: 3 May 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பூரில் அங்கன்வாடி மையத்தில் கழிப்பறை சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மேலும், அருகே கொட்டப்படும் குப்பைகளால் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திரு.வி.க. நகர்,

சென்னை பெரம்பூர் ஜமாலியா நெடுஞ்சாலையில் மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.

இந்த மையத்தில் உள்ள கழிப்பறை பராமரிக்கப்படாமல் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள் இயற்கை உபாதைகளை திறந்த வெளியிலேயே கழிக்கின்றனர். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களும் இயற்கை உபாதைகளை கழிக்க பெரும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த அங்கன்வாடி மையத்தை ஒட்டி பெருநகர சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை உரம் தயாரிக்கும் கூடம் கடந்த 2 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் காய்கறி கழிவுகள் உள்ளிட்ட சுமார் 200 கிலோ குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதில், சுமார் 150 கிலோ மக்கும் குப்பைகளை இங்கேயே வைத்து உரமாக்கும் முயற்சி நடைபெறுகிறது. மக்கா குப்பைகள் குப்பை கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது.

அங்கன்வாடி மையத்தை ஒட்டி குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் ஏற்படுவதாகவும், குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அங்கன்வாடி மையம் அருகே குப்பைகள் தரம்பிரிக்கும் கூடம் அமைக்கக்கூடாது என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கழிப்பறையை சீரமைத்து தர வேண்டும் என்றும், குப்பைகள் தரம் பிரிக்கும் கூடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த அங்கன்வாடி மையத்தில் சமூக விரோதிகள் சிலர் சத்துணவு கூடத்தின் ஜன்னலை உடைத்து திருட முயன்றனர். இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப அச்சம் அடைந்துள்ளனர். 

Next Story